மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!
மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துரு ஏறியப் பிரச்னை பூதாகரமாகி இருக்கிறது. இந்த விஷயம் ஜாவா பைக்கை வாங்க காத்திருப்போர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜாவாவுக்கு தனி மதிப்பு
சில தசாப்தங்களுக்கு முன்பு வரை விற்பனையில் இருந்த ஜாவா பைக்குகள் வாடிக்கையாளர் மனதில் தனி மதிப்பை பெற்றிருந்தது. பாரம்பரியம், தனித்துவமான டிசைனும், வித்தியாசமான சைலென்சர் சப்தமும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நிகரான மதிப்பை பெற்றுத் தந்தது. இன்றளவும் பழைய ஜாவா பைக்குகளுக்கு சந்தையில் தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது.

எகிடுதகிடான புக்கிங்
இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை ஜாவா பைக்குகளை கடந்த ஆண்டு இந்தியாவில் களமிறக்கியது. ராயல் என்ஃபீல்டுக்கு சரியான மாற்றாக இருந்ததால், பலரும் அடித்துப் பிடித்து புக்கிங் செய்தனர். ஆனால், உற்பத்தி போதிய அளவில் இல்லாததால், பல மாதங்கள் காத்திருப்பு காலம் நிலவுகிறது.

ஜாவா மீதான பிரியம்
இருந்தாலும், ஜாவா பிராண்டு மீதான பிரியத்தால், பலரும் காத்திருப்பு காலத்தை பொருட்படுத்தாமல், டெலிவிரி பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 20 நாட்களில் டெலிவிரி எடுக்கப்பட்ட புத்தம் புதிய ஜாவா பைக்குகளில் துரு ஏறிய பிரச்னை எழுந்துள்ளது.

துருப் பிரச்னை
மும்பையை சேர்ந்த சைலேஷ் சுவர்ணா என்ற வாடிக்கையாளர் கடந்த 2ந் தேதிதான் ஜாவா பைக்கை டெலிவிரி எடுத்துள்ளார். ஆனால், டெலிவிரி எடுத்த 15 நாட்களிலேயே அவரது ஜாவா பைக்கின் பல முக்கிய பாகங்கள் துருப் பிடித்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் டீலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

வேறு வழியில்லை
ஆனால், பைக்கை பயன்படுத்தி விட்டதால், மாற்றித் தர இயலாது, துருப்பிடித்த பாகங்களை பெயிண்ட் அடித்து கொடுத்துவிடுவதாக கூறி இருக்கின்றனர். வேறு வழியில்லாததால் அவர் ஒப்புக் கொண்டுவிட்டார். இதுதொடர்பாக, அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் படங்களை போட்டு குமுறி இருந்தார். இது முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்றுமொரு பைக்கிலும் துருப் பிரச்னை
இந்த நிலையில், அடுத்து ஒரு ஜாவா பைக் உரிமையாளரும் துருப் பிடித்த பிரச்னையை ஃபேஸ்புக் மூலமாக வெளியுலகத்திற்கு பட்டவர்த்தனமாக்கி இருக்கிறார். ஆதர்ஷ் குப்தா என்பவர் கடந்த 12ந் தேதிதான் தனது ஜாவா பைக்கை டெலிவிரி எடுத்துள்ளார்.

மட்டரகமான பெயிண்ட்
டெலிவிரி எடுத்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், எஞ்சின் ஹெட் உள்ளிட்ட பல பகுதிகளில் துரு ஏறி இருப்பது குறித்த படங்களை பதிவு செய்துள்ளார். அதாவது, மிக மட்டரகமான தரத்திலான பெயிண்ட் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
இதனால், வாங்கி இரு வாரங்களுக்குள்ளாகவே அந்த பைக்கில் துரு ஏறிவிட்டது. இது ஜாவா வாடிக்கையாளர்களை மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ஜாவா பைக்கை வாங்கலமா? வேண்டாமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சாதாரண நிறுவனம் கூட இப்போதைய காலக்கட்டத்தில் தர விஷயத்திற்கே முன்னுரிமை கொடுக்கின்றன.

வாடிக்கையாளர்கள் குமுறல்
தரத்தையும், பாரம்பரியத்தையும் வைத்துதான் பல வாடிக்கையாளர்கள் லட்சத்தை கொட்டி இதுபோன்ற பாரம்பரிய மதிப்பு உடைய பைக்குகளை வாங்குகின்றனர். ஆனால், அவர்களது எதிர்பார்ப்பை பொய்க்கும் விதத்தில், ஜாவா பைக்குகளில் துரு ஏறும் பிரச்னை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை
இந்த விஷயத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு தரமான பெயிண்ட் பயன்படுத்துவதற்கும், தர நிர்ணய விஷயங்களில் ஜாவா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜாவா பைக் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி முடிவு
ஜாவா பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள டெலிவிரி எஸ்டிமேட்டர் என்ற ஆன்லைன் வசதி மூலமாக டெலிவிரி பெறும் காலம் குறித்த தகவலை பெறும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மேலும் பல மாதங்கள் காத்திருப்பு காலம் காட்டுவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்போது துருப்பிடிக்கும் பிரச்னையும் சேர்ந்து கொண்டு, முன்பதிவை ரத்து செய்து விடலாமா என்ற மனோநிலைக்கு வந்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications








