2019 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் விற்பனைக்கு அறிமுகம்!
2019 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகி இசட்எக்ஸ்-10 ஆர் பைக்கின் மினி மாடலாக அழைக்கப்படும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்கிற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் முன்பதிவு துவங்கப்பட்டது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஒரே சூப்பர்ஸ்போர்ட் ரக பைக் மாடல் என்பதால் பைக் பிரியர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்தது.

இந்த நிலையில், இந்த பைக்கின் விலை விபரம் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. புதிய கவாஸாகி நின்ஜா இசட்-6ஆர் பைக் ரூ.10.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இதுவரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்போர்ட் ரகத்தை சேர்ந்த இந்த புதிய பைக் மாடல் சாதாரண சாலைகள் மற்றும் ரேஸ் டிராக் என இரண்டிலும் அசத்தலான பெர்ஃபார்மென்ஸையும், நிலைத்தன்மையும் வழங்கும். முகப்பு தோற்றம் நின்ஜா எச்2 சூப்பர் பைக்கை போன்ற சாயலில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 636சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 70.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட கியர் ரேஷியோவுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இதனால் மிக துல்லியமான கியர் மாற்றத்துடன் செயல்திறனை வெளிப்படுத்தும். குயிக் ஷிஃப்டர் வசதியும் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்சிடி திரையுடன் கூடிய ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ட்டர் ஆகிய முக்கிய அம்சங்களை பெற்றிருக்கிறது. கவாஸாகியின் இன்டலிஜென்ட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யுதகா யமஷிடா கூறுகையில்," வேர்ல்டு எஸ்எஸ்பி பைக் பந்தயங்களில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்த நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வேர்ல்டு எஸ்எஸ்பி பைக் பந்தயத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை இந்த பைக் வென்றிருக்கிறது. இந்தியாவில் முன்பதிவு துவங்கியது முதல் எதிர்பார்த்ததைவிட அதிக முன்பதிவு எண்ணிக்கையை பெற்றிருக்கிறது. இது நிச்சயம் இந்தியர்களை கவரும் மாடலாக இருக்கும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








