புதிய வண்ணத் தேர்வில் கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!
கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் பைக் இந்தியாவில் புதிய வண்ணத் தேர்வில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் சூப்பர் பைக் மார்க்கெட்டில் முதன்மை தேர்வுகளில் முக்கிய மாடலாக கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் பைக் பெயர் பெற்றுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்தில், 2020 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் பைக் புதிய வண்ணத் தேர்வில் வந்துள்ளது.

கவாஸாகியின் பாரம்பரிய வண்ணக் கலவையான கிளி பச்சை மற்றும் கருப்பு வண்ணக் கலவையுடன் கூடுதலாக தங்க வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் இந்த புதிய வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

2020 மாடலாக வர இருக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் பைக் இந்தியாவில் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த பைக்கை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும்.

புதிய வண்ணக் கலவையை தவிர்த்து, டிசைன் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க், ஃபேரிங் பேனல்களில் தங்க வண்ண ஸ்டிக்கர் மற்றும் ஃபேரிங் பேனல் கீழ் பகுதியில் கவாஸாகி ரேஸ் அணி லோகோ ஆகியவை கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய மாற்றமாக இருக்கிறது. பின்புற கவுல் பாகத்திலும் தங்க வண்ண அலங்கார ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளது.

புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 998 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். ராம் ஏர்டேக் கூடுதலாக பொருத்தினால், அதிகபட்சமாக 210 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

இந்த பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ இன்வெர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 330 மிமீ விட்முடைய டியூவல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.

புதிய கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் த்ராட்டில் வால்வுகள், ஓலின்ஸ் எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பர் மற்றும் டிரைவிங் மோடுகளும் உள்ளன.

சூப்பர் பைக் செக்மென்ட்டில் விலை குறைவான மாடல்களில் ஒன்றாக இருப்பதே, இதற்கு அதிக வரவேற்பு இருப்பதற்கான காரணம். இந்த பைக் ரூ.13.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். விலையிலும் மாற்றமில்லை. யமஹா ஒய்இசட்எஃப் ஆர்-1, பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர், ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர், டுகாட்டி பனிகேல் வி4, அப்ரிலியா ஆர்எஸ்வி4-ஆர்ஆர் மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








