டிரையம்ப் போனிவில் பைக்கிற்கு போட்டியாக கவாஸாகி களமிறக்கும் புதிய பைக் இதுதான்.. ஸ்பெஷல் ரிப்போர்ட்!
கவாஸாகி நிறுவனம், டிரையம்ப் போனிவில் பைக்கிற்கு போட்டியாக டபிள்யூ800 என்ற புதிய மாடல் பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

டிரையம்ப் நிறுவனத்தின் போனிவில் பைக்கிற்கு போட்டியாக இருக்கும் வகையில், கவாஸாகி நிறுவனம் டபிள்யூ800 என்ற புதிய மாடல் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவலை ஆங்கில இணையதளமான மேக்ஸ்அபவுட் வெளியிட்டுள்ளது.

அதேசமயம், டபிள்யூ800 மாடல் மோட்டார்சைக்கிள், இசட்900 ஆர்எஸ் பைக்கை ரீபிளேஸ் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இசட்900ஆர்எஸ் பைக் அதிக விலைக் கொண்ட 1000சிசி பைக்காகும்.

ஏற்கனவே, சர்வதேச சந்தையில் சிறப்பான வரவேற்புடன் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் டபிள்யூ800 மோட்டார்சைக்கிள், ஸ்ட்ரீட் மற்றும் கஃபே ஸ்டைலில் விற்பனையில் கிடைத்து வருகின்றது. ஆனால், இதில் ஒரு மாடல் மட்டுமே, முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அந்தவகையில், இந்தியாவிற்கு கஃபே ரேஸர் மாடல் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டபிள்யூ800 பைக்கின் எஞ்ஜின் மற்ற கவாஸாகி பைக்கைக் காட்டிலும் வித்தியாசமான அமைப்பைப் பெற்றதாக இருக்கின்றது.

அவ்வாறு, இந்த பைக்கில் 773 சிசி திறனை வெளிப்படுத்தும் ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 6,000 ஆர்பிஎம்மில் 48எச்பி பவரையும், 4,800 ஆர்பிஎம்மில் 62.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

டபிள்யூ800 மாடல் மோட்டார்சைக்கிளின், ஸ்ட்ரீட் வெர்ஷன் ரிலேக்ஸாக ரைட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களை அதன் எஞ்ஜின் பெற்றுள்ளது. மேலும், இந்த பைக்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் 1,465 மிமீ வீல் பேஸ், ரைடருக்கு அலாதியான பயண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

இது, தினந்தோறும் ரைடருக்கு, பைக்கை இயக்குவதற்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப, இதன் எஞ்ஜின் திறன் மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்டவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, இதன் இருக்கை 770 மிமீ இடைவெளியில் சொகுசான இருக்கை அமைப்பைப் பெற்றுள்ளது.

மேலும், அனைத்து சாலைகளிலும் சிறப்பாக செல்லும் வகையில், 100/90-18 அளவு கொண்ட டயர் முன் பக்கத்திலும், 130/80-18 அளவு கொண்ட டயர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பாதுகாப்பு வசதிகளாக, கவாஸாகி டபிள்யூ800 பைக்கில், 320மிமீ கொண்ட டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 270 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக் பின்பக்க வீலிலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஏபிஎஸ் வசதியும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பிரத்யேக வசதிகளைக் கொண்டு, மிகவும் ஸ்டைலான லுக்கில் இருக்கும் இந்த டபிள்யூ800 பைக்கை கவாஸாகி நிறுவனம், இந்திய மதிப்பில் ரூ. 7 முதல் 8 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








