பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய கவாஸாகி இசட்900 பைக் விற்பனைக்கு அறிமுகம்
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் எல்இடி ஹெட்லைட், 10.9 செமீ டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் சாதனத்துடன் ஸ்மார்ட்ஃபோனை புளூடூத் மூலமாக இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

புதிய கவாஸாகி இசட்900 பைக் மெட்டாலிக் கிராஃபைட் க்ரே- மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக்- மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் முக்கிய விஷயமாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 948 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎஸ் பவரையும், 98.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கின் கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதிகளை அளிக்கும். மேலும், ஸ்போர்ட், ரோடு, ரெயின் மற்றும் மேனுவல் என நான்குவிதமான ரைடிங் மோடுகளும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. 3 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

புதிய கவாஸாகி இசட்900 பைக்கின் ஃப்ரேம், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் சிஸ்டத்தில் எந்த மாறுதல்களும் இல்லை. பழைய பைக்கிலிருந்து அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது. ஆனால், டயர்கள் புதிது. இந்த பைக்கில் புதிய டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பழைய மாடலில் இருந்த டயர்கள் ஈரப்பதமான சாலைகளில் செல்லும்போது தரைப்பிடிப்பு குறைவாக இருந்ததால், இந்த புதிய டன்லப் டயர்களை கவாஸாகி பொருத்தியுள்ளது. இது சிறந்த தரைப்பிடிப்பை அளிக்கும் என்று நம்பலாம்.

பழைய கவாஸாகி இசட்900 பைக் ரூ.7.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலையில் கிடைத்து வந்தது. ஆனால், புதிய மாடல் ரூ.8.50 லட்சம் முதல் ரூ.9 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய கவாஸாகி இசட்900 பைக் நடுத்தர வகை சூப்பர் பைக் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750, டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ் மற்றும் கேடிஎம் 790 டியூக் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








