இந்தியாவில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் அட்டகாசம் எப்போது ஆரம்பம்?
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் சாகச ரக பைக் மார்க்கெட்டில் களமிறங்க கேடிஎம் ஆயத்தமாகி வருகிறது. அண்மையில் கோவாவில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ச்சர் பைக்கை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. வரும் ஜனவரியில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த நிலையில், கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கைவிட விலை குறைவான தேர்வாக 250 அட்வென்ச்சர் பைக் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு மத்தியில் புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் டிசைன், ஃப்ரேம் ஆகியவை இந்த புதிய 250 அட்வென்ச்சர் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். எனினும், சில சிறிய மாற்றங்களும், வேறுபாடுகளும் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதாவது, அதே பாடி பேனல்கள், ரேடியேட்டர் அமைப்பு, வால் பகுதி ஒன்றாக இருக்கும். அலாய் வீல்கள், டயர்கள் கூட ஒன்றாகவே இருக்கும் என்று தெரிகிறது. முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் உள்ளன.

ஆனால், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், ஹாலஜன் ஹெட்லைட் ஆகியவற்றுடன் 250 அட்வென்ச்சர் வேறுபடுத்தப்பட்டு இருக்கும். இந்த பைக்குகளில் முன்புறத்தில் 100/90 அளவுடைய டயரும், பின்புறத்தில் 130/80 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், மோனோ ஷாக் அப்சார்பரும் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் 249 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் வருகை நிச்சயம் கேடிஎம் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக இருக்கும். இது விலை குறைவான அட்வென்ச்சர் பைக் மாடலாக வருவதால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: ACI


Click it and Unblock the Notifications








