பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்!
கேடிஎம் நிறுவனம் அதன் புத்தம் புதிய பைக்கை எக்ஸ்சேஞ்ச் மற்றும் கூடுதல் சிறப்பு சலுகையின்கீழ் விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் தற்போது விழாக்காலம் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நாட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் மக்களைக் கவர்கின்ற வகையிலான புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் கேடிஎம் நிறுவனம், இந்திய இளைஞர்களை ஈர்க்கின்ற வகையிலான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின்மூலம் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியர்கள் விழாக்காலங்களில் புதிய வாகனங்களை வாங்கும் பழக்கமுடையவர்கள் என்பதைக் கருத்தில் கொண்ட கேடிஎம், இந்த அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.

மேலும், இந்த புதிய திட்டத்தின்கீழ் கால் லிட்டர் ஸ்ட்ரீட் பைக்கான 250 ட்யூக்கை விற்பனை முடிவு செய்துள்ளது. இதனை எக்ஸ்சேஞ்ஜின் அடிப்படையில் வழங்க இருக்கின்றது கேடிஎம்.
பழைய வாகனத்தின் தரம், மாடல் மற்றும் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் புதிய கேடிஎம் 250 ட்யூக்கின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

கேடிஎம் 250 ட்யூக் பைக் இந்தியாவில் ரூ. 2.24 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது டெல்லி ஆன்ரோடு விலையாகும்.
கேடிஎம் நிறுவனம், இந்த எக்ஸ்சேஞ் திட்டத்துடன் பூஜ்ஜியம் முன்தொகை மற்றும் குறைந்தபட்ச வட்டி விகிதம் உள்ளிட்டவற்றையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ஆனால், இந்த சலுகையைப் பெற ஒரு நிபந்தனையை இருக்கின்றது. அது, இத்திட்டத்தின்கீழ் கேடிஎம் 250 ட்யூக் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ரூ. 40 ஆயிரம் சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும் என்ற முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இத்திட்டத்தின்கீழ் 12 மாத தவனையில் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5.10 சதவீத வட்டியில் பைக் கொடுக்கப்பட உள்ளது. மேலும், 24 மாதங்கள் தவனை திட்டத்திற்கு 6.50 சதவீதம் என்ற வட்டியும், 36 மாதங்கள் தவனை திட்டத்திற்கு 7.10 சதவீதம் என்ற வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் நிறுவனத்தின் இந்த அதிரடி சிறப்பு சலுகை 250 ட்யூக் பைக்கிற்கு மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 390 ட்யூக் டிசைன் தாத்பரியங்களை தழுவி உறுவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட வசதிகள் அதில் இடம்பெற்றிருப்பதைப் போன்றே காட்சியளிக்கின்றது.

ஆனால், இந்த பைக்கில் 248.76 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினே காணப்படுகின்றது. இது அதிகபட்சமாக 29.6 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
திறனில் மட்டுமின்றி தொழில்நுட்ப வசதியிலும் கேடிஎம் 250 ட்யூக் சிறப்பானதாக காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், 250 ட்யூக் பைக்கின் உடல் கட்டமைப்பை குறைவானதாக உருவாக்க ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்போர்ட்ஸ் பைக்கில் காணப்படும் அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் மோனோசாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் ட்யூவல் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்டு வசதி என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








