கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்!
கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள பைக் மாடல் கேடிஎம் 390 அட்வென்ச்சர். கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சிசயில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக் பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இந்தநிலையில், அடுத்த மாதம் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய 390 அட்வென்ச்சர் பைக் மாடல் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் விபரமும் இப்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது, வரும் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவில் இந்த புதிய பைக் அறிமுகமாக இருக்கிறது. வரும் டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவின் மூலமாக இந்த புதிய பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ட்யூக் மற்றும் ஆர்சி வரிசையிலான பைக் மாடல்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேறே்பை பெற்றுவிட்ட கேடிஎம் நிறுவனம் இந்த புதிய அட்வென்ச்சர் மாடல் மூலமாக தனது வாடிக்கையாளர் வட்டத்தை மேலும் விஸ்தீரணப்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 390 ட்யூக் மற்றும் ஆர்சி பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 373.2 சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 44 எச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.

எஞ்சின் மட்டுமின்றி, சில முக்கிய பாகங்களை 390 கேடிஎம் பைக்குகளுடன் பகிர்ந்து கொள்ளும். ஆனால், முன்புறத்தில் லாங் டிராவல் சஸ்பென்ஷன் அமைப்பு, 19 அங்குல முன்சக்கரம், 17 அங்குல பின்சக்கரம் உள்ளிட்டவை இந்த பைக்கின் முக்கிய மாறுதல்களாக இருக்கும்.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் என்ற சாகசப் பயண ரகத்திலான இந்த பைக் மாடல் ரூ.3 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிபள்யூ ஜி 310 ஜிஎஸ் மாடலுக்கு நேர் எதிராக நிலைநிறுத்தப்படும். இந்த மாடல்தான் கேடிஎம் நிறுவனத்தின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர இருப்பதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Via - ACI


Click it and Unblock the Notifications








