இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது கேடிஎம் ஆர்சி125.. புக்கிங் தொடக்கம்?
கேடிஎம் ஆர்சி125 பைக் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள சூழலில், முன்பதிவு தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேடிஎம் ஆர்சி125 (KTM RC125) மோட்டார்சைக்கிள் மாடல், பல்வேறு சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டிலும் கேடிஎம் ஆர்சி125 வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஃபுல்லி ஃபேர்டு சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் மாடலான கேடிஎம் ஆர்சி125 இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது.

இது கேடிஎம் ஆர்சி125 பைக்கை வாங்க சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் ஆர்சி125 பைக்கிற்கான டீசர் ஒன்றை கேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் முடிவில் ‘Coming Soon' என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இன்னும் ஒரு சில நாட்களில் கேடிஎம் நிறுவனம் ஆர்சி125 மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதனிடையே இந்தியாவில் உள்ள சில கேடிஎம் டீலர்ஷிப்களில், கேடிஎம் ஆர்சி125 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.5,000 முன்பணம் செலுத்தி இந்த பைக்கை புக்கிங் செய்து கொள்ளலாம்.

ஆர்வம் இல்லையென்றால் முன்பணத்தை நீங்கள் திரும்ப பெற்று கொள்ள முடியும். மெக்கானிக்கலாக பார்த்தால், கேடிஎம் ட்யூக்125 பைக் மாடலுடன், பெரும்பாலான பாகங்களை கேடிஎம் ஆர்சி125 பகிர்ந்து கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி கேடிஎம் ஆர்சி125 பைக்கில், 124.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி, லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 14.5 எச்பி பவர் மற்றும் 12 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படவுள்ளது. 1.50-1.55 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் கேடிஎம் ஆர்சி125 பைக் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையை காட்டிலும் இதன் விலை 20-25 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம்.

இந்த விலை அடிப்படையில் பார்த்தால், யமஹா ஆர்15 வி3 மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 உள்ளிட்ட மாடல்களுடன், கேடிஎம் ஆர்சி125 போட்டியிடவுள்ளது. கேடிஎம் ஆர்சி125 மோட்டார்சைக்கிள் மாடலில் ஆரஞ்ச்தான் முதன்மையான வண்ணமாக இருக்கவுள்ளது.

இதுதவிர கருப்பும் முக்கிய வண்ணமாக இருக்கும். கேடிஎம் ஆர்சி125 பைக்கின் ஃப்ரேம் (Frame) கருப்பு வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்படவுள்ளது. அதே சமயம் வீல்களில் ஆரஞ்ச் வண்ணம் பயன்படுத்தப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








