ஹஸ்க்வர்னா பைக்குகளுக்காக மாற்றங்கள் செய்யப்படும் கேடிஎம் ஷோரூம்கள்!
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹஸ்க்வர்னா பைக்குகளுக்காக கேடிஎம் ஷோரூம்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த வாரம் கோவாவில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. டிசைனில் இந்த பைக்குகள் மிக அட்டகாசமாக இருக்கின்றன. நிச்சயம் இந்த பைக்குகள் இளைஞர்களை கவரும் வகையில் உள்ளன. இவை கேடிஎம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள கேடிஎம் ஷோரூம்கள் ஹஸ்க்வர்னா பைக்குகளுக்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 125 கேடிஎம் ஷோரூம்கள் கேடிஎம்- ஹஸ்க்வர்னா ஷோரூம்களாக மாற்றம் செய்யப்படும்.

இதைத்தொடர்ந்து, வரும் ஜூலை 1 முதல் நாட்டிலுள்ள 379 கேடிஎம் ஷோரூம்களிலும் ஹஸ்க்வர்னா பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கேடிஎம் பைக்குகளைவிட ஹஸ்க்வர்னா பைக்குகள் சற்று கூடுதல் விலையுடன் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளன.

எனவே, அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதத்தில், அதிக சிறப்பம்சங்களுடன் கேடிஎம் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகின்றன. மேலும், இரு பிராண்டு பைக் வாடிக்கையாளர்களையும் கையாள்வதற்கும், திருப்திப்படுத்துவதற்கும் இந்த மாற்றங்கள் நடந்து வருகின்றன.

கேடிஎம் ஷோரூம்களின் முகப்பில் இரு பிராண்டுகளின் பாரம்பரிய அம்சங்கள் மற்றும் சின்னங்களுடன் மாற்றம் செய்யப்படுகின்றன. உட்புறத்திலும், வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக சேவை வழங்கும் வித்ததில் மேஜைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், சர்வீஸ் மையத்தில் மாறுதல்கள் எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்திய பைக் வீக் திருவிழாவில் வெளியிடப்பட்ட ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு பைக் மாடல்களும் முதலாவதாக இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன. வரும் பிப்ரவரி மாதத்தில் விலை அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, மார்ச் மாதத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள கேடிஎம் ஷோரூம்களில் இந்த பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 பைக் ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைலிலும், விட்பிளேன் 250 பைக் ஸ்க்ராம்ப்ளர் ரகத்திலும் உள்ளன. இந்த பைக்குகளில் 248.8 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 31 எச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 153 கிலோ எடை கொண்டவையாக வர இருக்கின்றன.
Source: ACI


Click it and Unblock the Notifications








