நடப்பு நிதியாண்டில் விற்பனைக்கு களமிறங்கும் ஹீரோ நிறுவன டூவீலர்கள் இவைதான்...
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பல்வேறு புதிய தயாரிப்புகள் நடப்பு நிதியாண்டில் விற்பனைக்கு களமிறங்கவுள்ளன. அவை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், டெஸ்ட்டினி 125 (Destini 125) மற்றும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் (Xtreme 200R) ஆகிய டூவீலர்களை கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவ்விரு டூவீலர்களுக்கும் இரண்டு முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளன.

டெஸ்ட்டின 125தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் 125 சிசி ஸ்கூட்டர். இதன் காரணமாக அதிகப்படியான வாடிக்கையாளர்களை டெஸ்ட்டினி 125 கவர்ந்திழுத்து வருகிறது. மறுபக்கம் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளானது இந்தியாவில் கிடைக்கும் மலிவான 200 சிசி மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் நடப்பு நிதியாண்டில் மேலும் சில புதிய தயாரிப்புகளை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அவை குறித்து இனி தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 (Hero Xpulse 200)
2018ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார் சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன்பின் 2018 எக்மாவில் (EICMA) மீண்டும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 காட்சிப்படுத்தப்பட்டது. மிகவும் குறைவான விலையில், பராமரிக்க எளிதான அட்வென்ஜர் மோட்டார் சைக்கிளை எதிர்பார்ப்பவர்களை ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 நிச்சயம் கவர்ந்திழுக்கும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார் சைக்கிளில் ஸ்போக் வீல்கள் மற்றும் ஆஃப் ரோடுக்கு உகந்த டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீண்ட தூர தொலைவிற்கு ஏற்ற சஸ்பென்சனும் வழங்கப்பட்டுள்ளது. இதில், 199.5 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18 பிஎஸ் பவர் மற்றும் 17 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆல் எல்இடி ஹெட்லேம்ப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி (Hero Xpulse 200T)
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார் சைக்கிளுடன் இணைந்து எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார் சைக்கிளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 200டி என்பது எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார் சைக்கிளின் டூரிங் வெர்ஷன் ஆகும். இது 2018 எக்மாவில் வெளியிடப்பட்டது. பிளாட்பார்ம் மற்றும் இன்ஜின் உள்ளிட்ட அம்சங்களை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார் சைக்கிளுடன் இது பகிர்ந்து கொள்கிறது. ஆனால் ஸ்டைல் மற்றும் சஸ்பென்சஸ் செட் அப் உள்ளிட்ட அம்சங்களில் மாறுபடுகிறது. இதில், ஸ்போக் வீல்களுக்கு பதிலாக அலாய் வீல்கள் வழங்கப்படவுள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ 125 எஃப்ஐ (Hero Maestro 125 Fi)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரை லான்ச் செய்தபோது, மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் மேஸ்ட்ரோ 125 இந்தியாவில் விரைவில் லான்ச் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது. டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரை காட்டிலும் இது ஸ்போர்ட்டியர் ஆப்ஷனாக இருக்கும். அத்துடன் டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq) மற்றும் அப்ரிலா எஸ்ஆர் 125 (Aprilia SR 125) உள்ளிட்ட ஸ்கூட்டர்களுடன் இது போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








