பிச்சைக்காரர்கள் போல் மாறுவேடம் அணியும் போலீசார்... 'ஆபரேஷன் சிங்கம்' செயல்படுத்தப்படுவது இதற்குதான்
பிச்சைக்காரர்கள் போல் மாறுவேடம் அணிந்து, 'ஆபரேஷன் சிங்கம்' திட்டத்தை போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் சைலென்சர்கள் (Silencers) உமிழும் ஒலி அளவு 84 டெசிபல்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சைலென்சர்களில் இருந்து இதற்கு மேல் சப்தம் வரக்கூடாது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவான 84 டெசிபல்களை காட்டிலும், அதிக ஒலியை உமிழும் சைலென்சர்கள் பொருத்தப்பட்ட டூவீலர்கள் இந்திய சாலைகளில் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன.

பொதுவாக வெளி மார்க்கெட்களில் வாங்கப்படும் சைலென்சர்கள்தான் (After Market Silencers) அதிக சப்தம் எழுப்புகின்றன. வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் டூவீலர்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் அதிக சப்தத்தை விரும்பும் நபர்கள், தங்களுக்கு வேண்டிய சைலென்சர்களை வெளி மார்க்கெட்களில் வாங்கி பொருத்தி கொள்கின்றனர்.

எக்ஸாஸ்ட் வாயுக்கள் (Exhaust Gases) சுதந்திரமாக வெளியேற அனுமதிப்பதன் மூலம், வாகனத்தின் செயல்திறனை, வெளி மார்க்கெட் சைலென்சர்கள் அதிகரிக்கின்றன. அதிக ஒலி எழுவதற்கும் இதுதான் காரணம். இத்தகைய சைலென்சர்களுக்கு அனுமதி கிடையாது. ரேஸ் டிராக் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்தாலும் என்றாலும், பொது சாலைகளில் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் அதிக சப்தம் எழுப்பும் சைலென்ஸர்களை வெளி மார்க்கெட்களில் வாங்கி பொருத்தி கொள்ளும் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஒலி மாசுபடுகிறது என்பதை யாரும் கவனத்தில் கொள்வதே இல்லை. இப்படிப்பட்ட சைலென்சர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை போலீசாரால் நிறுத்தவும் முடிவதில்லை.

சீருடை அணிந்த போலீசார் கை காட்டினால், வாகன ஓட்டிகள் எப்படியாவது தப்பித்து சென்று விடுகின்றனர். எனவே ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வெளி மார்க்கெட் சைலென்சர்களை ஒலிப்பதற்காக ''குயிக் சிங்கம் ஆக்ஸன்'' (Quick Singham Action) என்ற ஆபரேஷனை போலீசார் தொடங்கியுள்ளனர். போலீசார் சீருடையில் இருப்பதால்தான் வாகன ஓட்டிகள் நிற்க மறுத்து தப்பி செல்கின்றனர்.

ஆனால் இத்திட்டத்தின்படி, பிச்சைக்காரர்கள் மற்றும் சாதுக்களை போல் மாறு வேடமிட்டு கொள்ளும் போலீசார், போக்குவரத்து சிக்னல் உள்ளிட்ட இடங்களில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விடுகின்றனர். அப்போது அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை பார்த்தால், உடனடியாக அதனை நிறுத்துகின்றனர்.

மாறுவேடத்தில் இருப்பது போலீசார் என்பது தெரியாததால், வாகன ஓட்டிகளும் நின்று விடுகின்றனர். அப்போது வாகனத்தின் சாவியை போலீசார் உடனடியாக எடுத்து விடுவதால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியால் அங்கிருந்து தப்பி செல்ல முடியாது. இதனை பயன்படுத்தி அந்த வாகனத்தின் லைசென்சரை போலீசார் அகற்றி விடுகின்றனர்.

மகாராஷ்ரா மாநிலம் பயான்டெர் போலீஸ் ஸ்டேஷன் காவலர்கள்தான் இந்த அதிரடி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். மாறுவேடம் அணிந்து போக்குவரத்து சிக்னல்களில் பணியில் ஈடுபடுவதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் தற்போது வரை 50-55 வாகனங்களின் வெளி மார்க்கெட் சைலென்சர்கள் அகற்றப்பட்டுள்ளன.

போலீசாரின் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை விளக்கும் வீடியோவை HP Live வெளியிட்டுள்ளது. போலீசாரின் கார்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து இந்த வீடியோ தொகுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
2 டூவீலர்களில் இளைஞர்கள் அதிவேகமாக வருவதை மேற்கண்ட வீடியோவில் பார்க்க முடிகிறது. அப்போது சீருடையில் உள்ள காவலர்கள், அவர்களை நிறுத்த முயல்கின்றனர். ஆனால் டூவீலர்களில் வந்த இளைஞர்கள் அவர்களிடம் இருந்து தப்பி செல்கின்றனர். ஆனால் அடுத்து வந்த சிக்னலில், மாறுவேடம் அணிந்து நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களை நிறுத்துகிறார்.

பின்னர் அவர் சாவியை எடுத்து கொண்டதால், அந்த இளைஞர்களால் அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை. இதன்பின் சம்மட்டியால் டூவீலர்களின் சைலென்சர்களை போலீசார் உடைக்கின்றனர். இந்த காட்சிகளை எல்லாம் மேற்கண்ட வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி வருபவர்களை நிறுத்தவும் போலீசார் இந்த வழிமுறையை கையாள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








