மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
மஹிந்திரா மோஜோ பைக்கின் ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் மஹிந்திரா மோஜோ வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக இருந்து வருகிறது. ஆனால், மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் டீலர் நெட்வொர்க் காரணமாக, விற்பனையில் எதிர்பார்த்த எண்ணிக்கையை பதிவு செய்யாத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில், புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப மஹிந்திரா மோஜோ 300 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, எக்ஸ்டி300 மற்றும் யுடி300 என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஏபிஎஸ் மாடல் ஒரே வேரியண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

மஹிந்திரா மோஜோ 300 பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய 294.72 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.29 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய எக்ஸ்டி மாடலைவிட பவர் மற்றும் டார்க் திறன் சற்றே குறைந்துள்ளது.

பழைய மாடலில் இரட்டை சைலென்சர் குழாய்கள் கொடுக்கப்பட்ட நிலையில், புதிய மஹிந்திரா மோஜோ 300 பைக்கில் முக்கிய மாற்றமாக ஒரு சைலென்சர் குழாய் அமைப்புடன் வந்துள்ளது.

புதிய மஹிந்திரா மோஜோ பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் ஆகியவையும் நீக்கப்பட்டுவிட்டன. டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், கேஜ் சார்ஜ்டு மோனோ ஷாக் அப்சார்பருடன் வந்துள்ளது.

மஹிந்திரா மோஜோ 300 பைக்கின் முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் பைப்ரே காலிபர்களுடன் கூடிய 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் பைரெல்லி ஏஞ்சல் சிடி டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.88 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட ரூ.4,000 கூடுதல் விலையில் புதிய ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
Image Courtesy: Farhan Khan/Instagram


Click it and Unblock the Notifications








