ஏபிஎஸ் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா மோஜோ... விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது...
ஏபிஎஸ் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா மோஜோ மோட்டார்சைக்கிள் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, பல்வேறு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இதன்படி இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

அதாவது 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதலே அமலுக்கு வந்து விட்டது. அதற்கு முன்னதாகவே பல்வேறு இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் மாடல்களை சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அப்டேட் செய்து விட்டன. இன்னும் சில நிறுவனங்கள் தொடர்ச்சியாக அப்டேட் செய்து வருகின்றன.

இந்த சூழலில் மஹிந்திரா மோஜோ (Mahindra Mojo) மோட்டார்சைக்கிளில் இன்னும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படவில்லை. ஆனால் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய மஹிந்திரா மோஜோ மாடலின் ஸ்பை படம் தற்போது வெளியாகியுள்ளது.

எனவே ஏபிஎஸ் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா மோஜோ பைக் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு களமிறங்கலாம்.

எக்ஸ்டி300 (XT300) மற்றும் யுடி300 (UT300) என மொத்தம் 2 வேரியண்ட்களில் மஹிந்திரா மோஜோ பைக் கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல்களிலும், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியை மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இரண்டு மாடல்களின் விலையும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு எந்த விஷயமும் மாற்றம் செய்யப்படாது என கூறப்படுகிறது.

அதாவது காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களுக்கு வாய்ப்புகள் இல்லை. எக்ஸ்டி300 மற்றும் யுடி300 ஆகிய மாடல்களில், 295 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு மாடல்களிலும் பவர் அவுட்புட் வேறுபடுகிறது.

மோஜோ யுடி300 மாடலின் கார்புரேட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 22.5 பிஎச்பி பவர் மற்றும் 25.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அதே சமயம் மோஜோ எக்ஸ்டி300 மாடலின் ப்யூயல் இன்ஜெக்ஸன் இன்ஜின் அதிகபட்சமாக 26.4 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.ஆனால் இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பஜாஜ் டோமினார் 400, ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் உள்ளிட்ட மாடல்களுடன், மஹிந்திரா மோஜோ எக்ஸ்டி300 மற்றும் யுடி300 மோட்டார்சைக்கிள்கள் போட்டியிட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








