பெரும் சோகத்திற்குள் தள்ளப்பட்ட மஹிந்திரா: அதிர்ச்சி தகவல்!
நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம், கடுமையான சோகத்தில் ஆழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, பன்ரக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இந்த நிறுவனம் டிராக்டர், கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களையும் தயாரித்து வருகின்றது. மேலும், இதனை உள்நாட்டு சந்தை மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில், இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ஆரம்ப ஸ்போர்ட் ரக பைக்கான மோஜோ, கடந்த மாத விற்பனையின்படி, ஒரு யூனிட்கூட விற்பனையாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று, யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பைக்குகளும் ஒரு யூனிட்கூட விற்பனையாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை ஆங்கில இணையதளமான ரஷ்லேன் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரலம் மாதம் 1ம் தேதி முதல் புதிய பாதுகாப்பு விதி அமலுக்கு வந்தது. அதன்படி, 125சிசிக்கு குறைவான வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கிங் வசதியும், அதற்கும் அதிகமான சிசி கொண்ட வாகனங்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால், இந்த வசதியை மஹிந்திரா மற்றும் யுஎம் மோட்டார்சைக்கிள்கள் ஆகிய இரு நிறுவனங்களும் இதுவரை அதன் தயாரிப்புகளில் கொண்டுவரவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம், இதுதான் இந்த நிறுவனத்தின் வாகனங்கள் ஒன்றுகூட விற்பனையாகததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் மஹிந்திரா நிறுவனம், மோஜோ பைக்குகளின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக அதன் விலையைக் கணிசமாக குறைத்து அறிவித்தது. இது, ஏற்கனவே மற்ற ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்குகளைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேலும் அதன் விலையைக் குறைக்கும் விதமாக அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, எக்ஸ்சேஞ் முறையில் ரூ. 60 ஆயிரம் வரை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு பைக்கை விற்பனைச் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. மஹிந்திரா நிறுவனம் இந்த பைக்கை ரூ. 1.49 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்து வருகிறது. இருப்பினுன் இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் ஒன்று கூட விற்பனையாகவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திரா அதன் பிராண்டில், கஸ்டோ, ரோடியோ ஆகிய ஸ்கூட்டர்களையும், சென்டூரோ, மோஜோ எக்ஸ்டி300, மோஜோ யுடி300 மற்றும் கிளாசிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தின்மூலம் ஜாவா ஆகிய பைக்குகளை விற்பனைச் செய்து வருகின்றது.

இதில், ஜாவாவைத் தவிர மற்ற எந்தவொரு வாகனமும் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனையாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஜாவா குறித்த தகவல் எப்போதும் மர்மமாகவே இருக்கின்றது. ஆனால், இதன் விற்பனை கணிசமாக உயர்ந்திருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், இதற்கான டிமாண்ட் தற்போது வரை நீடித்து வருகிறது. அதேசமயம், ஜாவா மோட்டார் சைக்கிள்கள் விற்பனையின் அறிமுகத்தின்போதே, புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டு விற்பனையில் இருந்து வருகிறது.

தொடர்ந்து, அமெரிக்க நிறுவனமான யுஎம் மோட்டார்சைக்கிள் குறித்து பார்ப்போமேயானால், இந்த நிறுவனமும் கடுமையான விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனை வீழ்ச்சி என்று கூட கூறமுடியாத அந்த அளவிற்கு அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், கமாண்டோ, மோஜவோ, ஸ்போர்ட், கிளாசிக் ஆகிய வேரியண்டகளில் அதன் பைக்குகளை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகிறது. இந்த பைக்குகள் கடந்த ஏப்ரல் மாதத்தின்படி, ஒரு யூனிட்டை கூட விற்பனைச் செய்யவில்லை.

இந்த அவல நிலைக்கு, அந்த பைக்குகள் தற்போதைய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்படாததே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், எதிர்காலத்தில் இந்த பைக்குகள் அதற்கேற்ப அப்டேட் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








