புதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்சி சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்!
புதிய எம்வி அகுஸ்ட்டா எஃப்-3 800 ஆர்சி சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கு கூடுதல் அம்சங்கள் கொண்ட எம்பி அகுஸ்ட்டா எஃப்-3 800 ஆர்சி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேஸ் பைக் போன்று ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதுடன், பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கான சிறப்பு ஆக்சஸெரீகள் அடங்கிய கிட்டுடன் வந்துள்ளது.

இத்தாலியின் தேசியக் கொடியின் மூவர்ண கலவையுடன் இந்த பைக் சிப்பு, வெள்ளை, ஆரஞ்ச் மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் அட்டகாசமாக காட்சி தருகிறது. ரிம்மில் ஆரஞ்ச் வண்ணம் கொடுக்கப்பட்ட விசேஷ சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அகுஸ்ட்டா ரேஸ் பைக்குகளை போன்ற தோற்றத்துடன் வந்துள்ளது.

இந்த பைக்கில் இருக்கும் 798 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎஸ் பவரையும், 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ரைடு பை வயர் மற்றும் 4 டிரைவிங் மோடுகளை இந்த பைக் பெற்றிருக்கிறது.

பாஷ் நிறுவனத்தின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 8 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ரேஸ் மோடு செட்டிங் மற்றும் பின்புற சக்கரத்திற்கான லிஃப் அப் மிட்டிகேஷன் பாதுகாப்பு நுட்பங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது.

இந்த பைக்கிற்கான ரேஸ் கிட் விலையில்லாமல் கொடுக்கப்படுவது முக்ககிய அம்சமாக கூறலாம். இந்த பைக்கின் ரேஸ் கிட்டில் எஸ்சி புரொஜெக்ட் டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபரிலான புகைப்போக்கி, விசேஷ இசியூ சாதனம், ஃபைபர் கிளாஸ் பின்புற கவுல் அமைப்பு, க்ளட்ச் லிவர் மற்றும் அலுமினியம் பாகங்கள் மூலமாக 8 கிலோ எடை குறைந்துள்ளது.

இதனால், இதன் செயல்திறன் சாதாரண எஃப்3 800 மாடலைவிட 5 பிஎஸ் கூடுதல் பவரை அளிக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த பைக்கிற்கான பேடாக் ஸ்டான்டும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகின்றன.

சாதாரண எஃப்-3 800 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 43 மிமீ மர்ஸோச்சி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள்தான் இந்த ஆர்சி மாடலிலும் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் சாக்ஸ் நிறுவனத்தின் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் பிரெம்போ மோனோபிளாக் காலிபர்களும், பின்புறத்தில் இரட்டை பிஸ்டன் பிரெம்போ காலிபரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய எம்வி அகுஸ்ட்டா எஃப்-3 800 ஆர்சி பைக் ரூ.21.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட ரூ.4 லட்சம் கூடுதல் விலையில் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோராயல் ஷோரூம்கள் வாயிலாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








