புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் விற்பனைக்கு அறிமுகம்!
டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 939 பைக்கிற்கு மாற்றாக ஹைப்பர்மோட்டார்டு 950 பைக் கடந்த ஆண்டு ஐக்மா கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு விதத்திலும் இந்த புதிய பைக் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பைக் ஸ்டான்டர்டு மற்றும் எஸ்பி ஆகிய இரண்டு மாடல்களில் அறிமுகமானது. சேஸீ, எஞ்சின், சஸ்பென்ஷன், மின்னணு தொழில்நுட்பங்கள் ஆகிய அனைத்தும் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஃப்ரேம் தடிமன் 3 மிமீ ஆக இருந்தது தற்போது 2.5 மிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், எடை 181 கிலோவிலிருந்து 178 கிலோவாக குறைந்துள்ளது.

ஸ்டான்டர்டு மாடலில் மர்ஸோச்சி அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், சாக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. எஸ்பி மாடலில் முழுவதுமான அட்ஜெஸ்ட் வசதியுடுன் கூடிய ஓலின்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் பகல்நேர விளக்குகள், அலுமினியம் ஹேண்டில்பார், கழற்றி, மாட்டக்கூடிய ஃபுட்பெக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. யுஎஸ்பி பவர் சாக்கெடும் உள்ளது. இந்த பைக்கில் 4.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டம் செயலியை ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. போன் அழைப்புகள், குறுந்தகவல் அனுப்புவதற்கும், பாடல்களை கேட்பதற்கும், மாற்றுவதற்கான வசதிகளை இது அளிக்கும். புளூடூத் இணைப்பு வசதி உள்ளது.

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 பைக்கில் 937 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் பழைய எஞ்சினைவிட 1.5 கிலோ எடை குறைவானது.

பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், டுகாட்டி டிராக்ஷன் கன்ட்ரோல், எவோ, டுகாட்டி வீலி கன்ட்ரோல் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

இந்த பைக்கில் இருக்கும் 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட் என்ற சாதனம் மூலமாக பைக் ஆபத்தான கோணத்தில் வளைந்து செல்வது அல்லது கவிழும் நிலை குறித்து எச்சரிக்கும். இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் பிரெம்போ காலிபர்கள் கொண்ட 245 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் பிரெம்போ கிலாபர் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளது.

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950 மாடலுக்கு ரூ.11.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான மாடலாக வாடிக்கையாளர்களை கவரும்.


Click it and Unblock the Notifications








