புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் 1100 பைக்கின் டீசர் வெளியீடு!
புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் 1100 பைக்கின் மீதான ஆவலை அதிகரிக்கும் விதத்தில் புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த மாடலாக இருந்து வருகிறது. தற்போது இந்த பைக் ஸ்டான்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

இதில், அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மாடலில் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற டயர்கள், விபத்து பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. மேலும், ஆஃப்ரோடு பயன்பாட்டினால், பைக்கில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் விசேஷ ஆக்சஸெரீகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், அனைத்து விதத்திலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் வரும் 23ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பைக்கில் முக்கிய மாற்றமாக தற்போதைய 999 சிசி எஞ்சினுக்கு பதிலாக 1100 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது.

அதாவது, புதிய மாடலில் 1,084 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 107 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
தற்போதைய மாடலைப்போலவே, புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் மாடலிலும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆகிய இரண்டு தேர்வுகளில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற இருக்கும் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே, டோக்கியோ மோட்டார் ஷோவில் இந்த புதிய பைக் மாடலை ஹோண்டா காட்சிக்கு வைக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








