மீண்டும் விற்பனைக்கு வந்தது ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டர்!
சிபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் புதிய நவி ஸ்கூட்டரை ஹோண்டா விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய நவி மாடலுக்கு ரூ.47,110 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டர் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மொபட்டையும், ஸ்கூட்டரையும் கலந்து கட்டிய மோட்டோஸ்கூட்டர் ரகத்தில் வடிவமைக்கப்பட்ட ஹோண்டா நவி ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் ஹோண்டாவிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதனால், கடந்த ஆண்டு ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டர் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த சூழலில், நவி மோட்டோஸ்கூட்டரை ஹோண்டா விடுவதாக இல்லை. தற்போது சிபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் புதிய நவி ஸ்கூட்டரை ஹோண்டா விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய நவி மாடலுக்கு ரூ.47,110 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக, இரண்டு சக்கரங்களின் பிரேக்குகளும் ஒருங்கிணைந்து செயல்படும். இதனால், கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை நவி மோட்டோஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டதை தவிர்த்து, வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை. எனினும், வாடிக்கையாளர் விருப்பம்போல் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த மோட்டோஸ்கூட்டருக்கு ஹோண்டா வழங்குகிறது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 110சிசி ஏர்கூல்டு எஞ்சின்தான் புதிய ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டரிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.94 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ரக ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. ட்யூப்லெஸ் டயர்களும் இதன் முக்கிய அம்சம்.

புதிய ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டர் மாடலானது ரேஞ்சர் க்ரீன், லடாக் பிரவுன், ஆரஞ்ச், வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும். விசேஷமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களையும் பெற்று பொருத்த முடியும்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா நவி காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை 1 லட்சம் நவி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், விற்பனை தொடர்ந்து சரிந்து வந்ததால், கடந்த ஆண்டு விலக்கப்பட்டது.

எனினும், தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வந்திருக்கும் புதிய ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டர் வாடிக்ககையாளர்களை கவர்ந்து விற்பனையில் சோபிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








