புதிய 1,000 சிசி ஹைப்பர் பைக்கின் டீசரை வெளியிட்டது கவாஸாகி!
புதிய 1,000 சிசி ஹைப்பர் பைக் மாடலை கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. உலக அளவில் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த புதிய பைக் மாடல் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹைப்பர் பைக் மார்க்கெட்டில் நேக்கட் ஸ்டைல் பைக் மாடல்கள் விரல் விட்டு எண்ணும் வகையிலேயே உள்ளன. எம்வி அகுஸ்ட்டா புரூட்டேல் 1000 செரி ஓரோ மற்றும் விரைவில் வரும் டுகாட்டியின் புதிய மாடல் என விரல் விட்டு எண்ணும் வகையிலேயே உள்ளன. அதுவும் இத்தாலி நிறுவனங்கள்தான் இந்த நேக்கட் வகை ஹைப்பர் பைக் மாடல்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் விரைவில் புதிய 1,000 சிசி நேக்கட் ரக ஹைப்பர் பைக் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. டீசர் மூலமாக இந்த புதிய பைக்கின் வருகையை உறுதி செய்துள்ளது.

கவாஸாகி நிறுவனத்தின் நேக்கட் ரக மாடல்கள் Z என்ற குடும்ப வரிசையில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த புதிய பைக் மாடல் Z1000 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.
மேலும், கவாஸாகி நின்ஜா எச்2 ஹைப்பர் பைக்கின் நேக்கட் ரக மாடலாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஃபேரிங் பேனல்கள் இல்லாமல், திறந்த மேனி வடிவமைப்பை பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

இந்த பைக்கில் நின்ஜா எச்2 பைக்கில் பயன்படுத்தப்படும் 998 சிசி சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.

இந்த பைக்கின் எஞ்சின் மட்டுமின்றி, ஃப்ரேம், சஸ்பென்ஷன், பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை நின்ஜா எச்2 பைக்குடன் இந்த புதிய மாடல் பகிர்ந்து கொள்ளும். இதற்காக வெளியிடப்பட்டுள்ள டீசரில் அதிக தகவல்கள் இல்லை. இருந்தாலும், இது நிச்சயம் நின்ஜா எச்2 பைக்கின் நேக்கட் மாடல் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் தனது தாயகமான ஜப்பானில் நடைபெற இருக்கும் டோக்கியோ ஆட்டோ ஷோவில் இந்த புதிய பைக்கை கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய மாடலின் டீசர் உலக அளவில் பைக் பிரியர்களின் ஆவலை கிளறியுள்ளது.


Click it and Unblock the Notifications








