புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!
சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடல் பைக்கின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் சுஸுகி ஜிக்ஸெர் இந்திய இளைஞர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. இந்த சூழலில், ஜிக்ஸெர் பிராண்டுக்கு இருக்கும் மதிப்பை வைத்து கூடுதல் வர்த்தகத்தை பெறும் வகையில், 250சிசி மாடலையும் சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

வரும் 20ந் தேதி புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக அண்மையில் டீசர் ஒன்றையும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டது. தற்போது வர இருக்கும் மாடலானது முழுவதும் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்டைலில் வர இருக்கிறது.

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்250ஆர் பைக்கின் டிசைன் அம்சங்கள் இந்த பைக்கிலும் இருக்கிறது. அகலமான பின்புற டயர், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் ஆகியவை இந்த பைக்கின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

டீசரை வைத்து பார்க்கும்போது இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெறும் என்று தெரிகிறது. முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக்-அப்சார்பர் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் இருக்கும் 250சிசி எஞ்சின் அதிகபட்சமாக 26.5 எச்பி பவரை வெளிப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நீலம், சாம்பல், சில்வர் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், ஜிக்ஸெர் 150 பைக் மாடல்களின் முக்கிய உதிரிபாகங்களை இந்த பைக் பங்கிட்டு கொள்ளும். எனவே, விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.35 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா ஃபேஸர் 25, கேடிஎம் ஆர்சி200, ஹோண்டா சிபிஆர்250ஆர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். சிறப்பான கையாளுமை மற்றும் கட்டுமானத் தரத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Motoroids


Click it and Unblock the Notifications








