புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்!
புதுப்பொலிவுடன் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நடுத்தர வகை ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக் மார்க்கெட்டில் சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அசத்தும் தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான விலை தேர்வில் இந்த பைக் கிடைக்கிறது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களுடன் இரண்டு புதிய வண்ணங்களில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மெட்டாலிக் மேட் பிளாக் மற்றும் பியர்ல் கிளேசியர் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் இனி கிடைக்கும்.
இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 749சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பைக்கின் முன்புறத்தில் இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் லிங்க் டைப்பிலான மோனோ ஷாக்அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் இரண்டு 310 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன.
டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. தவிரவும், 3 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருப்பதால் மிகச் சிறந்த பாதுகாப்பு மிக்க மாடலாக கூறலாம்.
இந்த பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இதன்மூலமாக, பல்வேறு தகவல்களை பெற இயலும். ஓட்டுபவருக்கு சிறப்பான இருக்கை அமைப்பை பெற்ற ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் மாடலாகவும் இது பெயர் பெற்றிருக்கிறது.
புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் ரூ.7.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலைவிட ரூ.1,000 கூடுதல் விலையில் புதிய வண்ணங்களில் வந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிக்பைக் பிரிமீயம் ஷோரூம்களில் இந்த பைக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








