புதிய சுஸுகி எஸ்வி650 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது!
சுஸுகி எஸ்வி650 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புத்தம் புதிய சுஸுகி பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத சரிவை சந்தித்து வரும் நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இந்த சூழலில்,விற்பனையில் சற்றே தாக்குப்பிடித்து ஸ்திரமான வர்த்தகத்தை சுஸுகி நிறுவனம் பதிவு செய்து வருகிறது.

மேலும், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டங்களுக்கும் செயலாக்கம் கொடுத்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் தனது எஸ்வி650 என்ற நடுத்தர வகை பிரிவு ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பாரம்பரிய டிசைன் அம்சங்கள் கொண்ட நேக்கட் ஸ்டைல் மாடலாக இந்த பைக் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கைவிட இந்த புதிய மாடலானது 18 கிலோ எடை குறைவானதாகவும், மிக அடக்கமாகவும் இருக்கிறது.

சுஸுகி 650எக்ஸ்டி பைக்கில் இருக்கும் வி- ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎஸ் பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், எஸ்வி650 பைக்கில் இருக்கும் இதே எஞ்சின் சற்றே கூடுதல் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

இந்த பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இல்லை. ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லோ-ஆர்பிஎம் அசிஸ்ட் சிஸ்டம் ஆகியவை நிரந்தர தொழில்நுட்ப அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் உயர் வகை மாடல்களான ஹயபுசா, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மற்றும் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஆகிய பைக் மாடல்கள் முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதே வழியில், புதிய எஸ்வி650 பைக்கையும் பாகங்களாக இறக்குமதி செய்து ஒருங்கிணைத்து விற்பனை செய்ய சுஸுகி முடிவு செய்துள்ளது.

புதிய சுஸுகி எஸ்வி650 பைக் ரூ.6 லட்சம் முதல் ரூ.6.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரகத்தில் இது தனித்துவமான தேர்வாக நிலைநிறுத்தப்படும்.
Source: Bikedekho


Click it and Unblock the Notifications








