ரணகளத்திலும் ஒரு குதூகலம்... ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைந்தது!
ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத வீழ்ச்சி முகத்தில் உள்ளது. பல ஆயிரம் கோடி செய்த முதலீடுகளுடன் கை பிசைந்து நிற்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. இந்த பிரச்னையை ஆராய்ந்து பார்த்தால் ஜிஎஸ்டி வரிதான் பெரிய நெருக்கடியை அளித்துள்ளது தெரியவருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் நடுத்தர, சிறுகுறு தொழில்கள் நசிவடைந்ததால், வாகன விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியால் வாகனங்களின் விலையேற்றமும் முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.

ஒருபுறத்தில் ஜிஎஸ்டி வரியால் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் ஒகினவா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களின் விலையை கணிசமாக குறைத்துள்ளது.

ஒகினவா நிறுவனம் ஐ-பிரெய்ஸ் ப்ளஸ், ரிட்ஜ் ப்ளஸ், பிரெய்ஸ், ரெய்ஸ், ரிட்ஜ் 30 ஆகிய பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது. இவை லீட் ஆசிட் மற்றும் லித்தியம் அயான் பேட்டரியுடன் கிடைக்கின்றன.

இதில், லீட் ஆசிட் பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின் விலை ரூ.2,500 முதல் ரூ.4,700 வரையில் குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்களின் விலை ரூ.3,400 முதல் ரூ.8,600 வரையில் குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர, ஃபேம்-2 மானியத் திட்டம் மற்றும் வருமான வரிச்சலுகைகள் மூலமாக இந்த ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் சேமிப்புகளை பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடன் திட்டத்தில் வாங்குவோர் அதற்கான வட்டிக்கு வருமான வரியில் இருந்து கழிவு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இது நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

எனவே, ஆட்டோமொபைல் துறை பெரும் இழப்பில் இருந்தாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரிக்கத் துவங்கி இருப்பதும், அரசின் ஊக்குவிப்புத் திட்டங்களும் ஆறுதலாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








