சூப்பரப்பு... சிறப்பு சலுகை விலையில் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - வெளிநாடு செல்லவும் வாய்ப்பு!
ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறப்பு சலுகை விலையில் கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போட்டியில் வெல்லும் வாடிக்கையாளரை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒகினாவா மின்வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் குறிப்பிட்ட மாடல் இ-ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.
அந்தவகையில், ரிட்ஜ்30 (Ridge30), ரெய்ஸ் (Raise), பிரெய்ஸ் (Praise), ரிட்ஜ் (Ridge), ரிட்ஜ் பிளஸ் (Ridge Plus) மற்றும் ஐ பிரெய்ஸ் (i-Praise) ஆகிய ஆறு மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அது இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த மேற்கூறிய ஆறு மாடல்களையும் ஒகினவா நிறுவனம் சலுகையில் விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான சலுகை காலத்தையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு சலுகையை வருகின்ற விழாக்காலங்களைக் கொண்டாடும் வகையில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன், பெரியளவிலான பரிசுகளை வழங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதேசமயம், ஒகினவாவின் இந்த சிறப்பு சலுகை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. அவை, கடந்த ஆகஸ்ட் 12ம் தொடங்கியுள்ளது. மேலும், வருகின்ற அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை இச்சலுகை நீடிக்கும்.

இந்த திட்டத்தின்மூலம், ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியாக ரூ. 1,000 வழங்கப்பட உள்ளது. இத்துடன், லக்கி டிராவ் என்ற போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் 20 வாடிக்கையாளர்களுக்கு ஏசி, எல்இடி டிவி, மைக்ரோ வேவ் மற்றும் மிக்ஸி உள்ளிட்ட மின்சாதனங்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும், மெகா பரிசாக தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளரை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் விற்பனையை அதிகரிப்பது மட்டுமின்றி, விழாக்காலங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் வெளியிட்டுள்ளது. முக்கியமாக அடுத்தடுத்து வரவிருக்கும் நவராத்திரி, தசேரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை தினத்தை சிறப்பிக்கும் வண்ணமாக ஒகினாவா இத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

மின் வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய அரசு அண்மையில் குறைதது. இதனால், மின் வாகனங்களின் விலை கணிசமாக குறைய இருக்கின்றது.

அந்தவகையில், ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 8,600 வரை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவை, மாடலுக்கு ஏற்ப வேறுபடும். அவ்வாறு, லீட் ஆசிட் பேட்டரி மாடல்களின் விலை ரூ. 2,500 முதல் ரூ. 4,700 வரை குறைய இருக்கின்றது. அதேபோன்று, லித்தியம் அயன் பேட்டரி மாடல்களின் விலை ரூ. 3,400ல் இருந்து 8,600 ரூபாய் வரை குறைய உள்ளது.

இத்துடன், ஃபேம்-2 திட்டத்தின்கீழ் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மானியமும் வழங்கப்பட உள்ளது. மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு வழங்கும் சிறப்பு சலுகையுடன், ஒகினவா நிறுவனத்தின் சிறப்பு தள்ளுபடி, அதன் மின்சார ஸ்கூட்டர்களை மேலும் மலிவு விலை மாடல்களாக மாற்றியுள்ளது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஒகினவாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரூ. 37 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் இருந்து, ரூ. 1.12 லட்சம் என்ற அதிகபட்சம விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது, மாடல் மற்றும் பேட்டரி திறனைப் பொருத்து மாறுபடும். இதில், அதிகபட்ச விலைக் கொண்டதாக ஐ பிரெய்ஸ் மாடல் இருக்கின்றது. இதன் விலை தற்போது ரூ. 1.08 லட்சமாக மாறியுள்ளது.

தற்போது உள்ள சிறப்பு சலுகைக்கு முன்னதாக இந்த ஸ்கூட்டர் ரூ. 1.12 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்தது 160ல் இருந்து 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இது மணிக்கு 75 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications