புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்
ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முக்கிய போட்டியாளராக மாறி இருக்கும் ஒகினவா நிறுவனம் அடுத்து ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் களமிறக்க உள்ளது. ஒகினவா லைட் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மாடல் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர இருக்கிறது.

இந்த நிலையில், இந்த ஸ்கூட்டரின் சில ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்பை படங்களில் இந்த ஸ்கூட்டர் தயாரிப்பு நிலை அம்சங்களுடன் மிக விரைவில் சந்தைக்கு வந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்புற அப்ரான் பேனலில் புரொஜெக்டர் போன்ற இரட்டை அறையுடன் கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. மேலும், U-வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன.

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெயில் லைட் க்ளஸ்ட்டர் பல்வேறு எல்இடி விளக்குகள் கொண்டதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறத்தில் அமைந்துள்ள கிராப் ரெயில் கைப்பிடி பின்னால் அமர்ந்து செல்பவருக்கு அதிக பிடிப்பை வழங்கும் வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இதன் வடிவமைப்பு நவீனமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்த ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. மேலும், இதன் டிஜிட்டல் திரையானது டின்ட் செய்யப்பட்டு இருப்பதால், தெளிவாக தகவல்களை பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும். இந்த ஸ்கூட்டரில் லோ, ஹை மற்றும் எக்ஸீடு ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் இருப்பது தெரிகிறது. அத்துடன், ஸ்பீடோமீட்டர் மற்றும் டாக்கோமீட்டரும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளது. பாக்கெட்டில் சாவி இருந்தாலே, ஒரு பட்டன் மூலமாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துவிட முடியும். அதேபோன்று, இதில் புளூடூத் இணைப்பு வசதியும் இருக்கும். யுஎஸ்பி சார்ஜர் ஸ்டார்ட்- ஸ்டாப் பட்டனுக்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ளது.

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த ஸ்கூட்டரின் இருக்கை அமைப்பு மிக அடக்கமாக தெரிகிறது. இதன் பின்புறத்தில் ரிஃப்லெக்டர் ஸ்டிக்கர், நம்பர் பிளேட் விளக்கு ஆகியவற்றுடன் காட்சி தருகிறது. இதன் பின்புற வடிவமைப்பு சற்றே வித்தியாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்கூட்டரில் இடம்பெறும் பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்ட தொழில்நுட்ப விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் ஒற்றை தாங்கு அமைப்புடைய மோனோஷாக் அப்சார்பர் இடம்பெற்றிருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படும். அதேபோன்று, அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவையும் இந்த ஸ்கூட்டரின் மிக முக்கிய அம்சங்களாக இருக்கும். மிக விரைவில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Autopunditz


Click it and Unblock the Notifications








