தோற்றத்திலும், செயல்திறனிலும் மிரட்டும் புதிய ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்!
பெங்களூரை சேர்ந்த ஆர்க்ஸா எனெர்ஜிஸ் நிறுவனம் அசத்தும் அம்சங்களுடன் தனது முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை இந்திய பைக் திருவிழா மூலமாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பெங்களுரை சேர்ந்த ஆர்க்ஸா எனெர்ஜிஸ் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு ரஞ்சிதா ரவி, பிரஜ்வால் சப்னிஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது. பெர்ஃபார்மென்ஸ் வகை எலெக்ட்ரிக் பைக் மாடலை தயாரிக்கும் திட்டத்துடன் தனது முதல் மாடலை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதன் பயனாக, மண்டிஸ் என்ற பெயரிடப்பட்டு இருக்கும் தனது முதல் பைக் மாடலை கோவாவில் நடந்து வரும் இந்திய பைக் வீக் திருவிழாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய மண்டிஸ் பைக்கின் தோற்றமும், செயல்திறனும் பார்வையாளர்களையும், பைக் பிரியர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த பைக்கில் 1.5kWh திறன் கொண்ட பேட்டரிகள் அடங்கிய 9kWh திரன் வாய்ந்த மின்கலன் தொகுப்பை பெற்றிருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 3.5 மணிநேரம் பிடிக்குமாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

இந்த பைக்கின் மோட்டார் அதிகபட்சமாக 70 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. மணிக்கு 140 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையை பெற்றிருக்கிறது இந்த எலெக்ட்ரிக் பைக்.

புதிய மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்கில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கூர்மையான பாகங்களுடன் மிரட்டலான தோற்றம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. க்ளிப் ஆன் ஹேண்டில்பார் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிட்டு கூற வேண்டிய விஷயமாக இருக்கும்.

தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாடலானது புரோட்டோடைப் மாடலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தயாரிப்புக்கு உகந்த நிலைக்கு மேம்படுத்தப்பட உள்ளதுடன், அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கும் கொண்டு வர ஆர்க்ஸா எனெர்ஜிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக பெங்களூரில் இந்த பைக்கின் விற்பனையை துவங்குவதற்கு ஆர்க்ஸா எனெர்ஜிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாட்டின் இதர முக்கிய நகரங்களில் ஷோரூம் திறக்க உள்ளது. இதுதொடர்பான விபரங்களை பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யும்போது வெளியிட ஆர்க்ஸா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








