வணிக ரீதியாக பயன்படும் சிறிய அளவு ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகும் பீஜோ...?
வணிக ரீதியாக பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள லூடிக்ஸ் ஸ்கூட்டரை, பீஜோ மோட்டார் சைக்கிள் நிறுவனம் சோதனையோட்டம் செய்யும் புகைப்படங்கள் கசிந்துள்ளன. இந்த ஸ்கூட்டர் குறித்த படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பீஜோ மோட்டார்சைக்கிள் நிறுவனம் லூதிக்ஸ் என்னும் கமர்ஷியல் ரக ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, மஹராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரின் பிம்ப்ரி-சின்ச்வாட் என்னும் பகுதியில் அந்த நிறுவனம் சோதனையோட்டம் செய்தது. அப்போது, ஸ்கூட்டரின் படங்களும், அது குறித்த சில தகவல்களும் நமக்கு கிடைத்தது.

பீஜோ நிறுவனம் தனது லூடிக்ஸ் ஸ்கூட்டரை ஏற்கனவே வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், இந்த நிறுவனம் தற்போது தான், முதல்முறையாக தனது கமர்ஷியல் ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் ஒன், ஸ்நேக் மற்றும் பிளாஸ்டர் ஆர்எஸ்12 ஆகிய மூன்று வேரியண்ட்களில் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன. மேலும், இ-லூடிக்ஸ் என்னும் மின்சார ஸ்கூட்டர் வேரியண்டிலும் இது கிடைக்கின்றது.

இந்த நிலையில், இந்த லூடிக்ஸ் ஸ்கூட்டரை தற்போது இந்தியாவில் விற்பனை செய்யும் விதமாக பீஜோ நிறுவனம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியச் சாலைகளுக்கு ஏற்ப இந்த ஸ்கூட்டரை தயார் செய்யும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

லூடிக்ஸ் ஸ்கூட்டர், முழுக்க முழுக்க கமர்ஷியல் பயன்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், நாம் அனைவரும் அறிந்த பஜாஜ் எம்80 மோட்டார்சைக்கிளுக்கு அடுத்தபடியாக கமர்ஷியல் பயன்பாட்டுக்காகவே பிரத்யேமாக இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவிருக்கின்றது.

அதன்படி, இந்த ஸ்கூட்டரின் மூன்று வேரியண்ட்களில் ஒன் வேரியண்ட் ஸ்கூட்டரில் பின் பக்கம் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய ஸ்டாண்ட் வடிவிலான கிரில் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து ஸ்கூட்டரின் முன்பக்கத்தில், அதாவது கால் வைக்கும் பகுதியிலும் பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக இடைவெளி விடப்பட்டுள்ளது. ஆகையால், இந்த ஸ்கூட்டர் டெலிவரி மற்றும் பெரிய அளவிலான பார்சல்கள் ஆகியவற்றைக் கொண்டுச் செல்வது மிகவும் சுலபமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

லூடிக்ஸ் ஸ்கூட்டரில் 50சிசி திறன் கொண்ட 4 ஸ்டிரோக் ஏர்-கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிவிடி டிரான்ஸ்மிஷனில் இயங்கும். மேலும், இந்த ஸ்கூட்டர் மொத்தமாக 14 இன்ச் நீளம் கொண்டதாகவும், 775mm உயரம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, லூடிக்ஸ் ஸ்கூட்டரின் எடையானது 84 கிலோவாக உள்ளது. இதையடுத்து, ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர்த்து, லூதிக்ஸ் ஸ்கூட்டரின் விலை மற்றும் மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

பீஜோவின் இந்த லூடிக்ஸ் ஸ்கூட்டர் சந்தையில் விற்பனைக்கு வருமேயானால் டெலிவரி மற்றும் நம்ம ஊர் கடைக்காரர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்னறால், முன்னதாக பயன்பாட்டில் இருந்த (தற்போது அரிதாக காணப்படும்) பஜாஜ் எம்80 மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனையில் இல்லாத குறையை இந்த ஸ்கூட்டர் போக்கிவிடும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








