இந்தியர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாகும் அப்ரில்லா 200சிசி ஸ்கூட்டர்? -சிறப்பு தகவல்!
பியாஜியோ நிறுவனம் இந்தியர்களுக்கான பிரத்யேகமான 200சிசி ஸ்கூட்டரை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் விரவாக பார்க்கலாம்.

இந்தியா, வாகனங்கள் சார்ந்த சந்தையில் அதீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதற்கு, நாள்தோறும் நாம் பயணிக்கும் சாலைகளே சாட்சியாக இருக்கின்றன. ஒவ்வொரு சிக்னலையும் கடந்து செல்வதற்கு, குறைந்தது 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரையிலாவது எடுத்துக்கொள்கிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்கள் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

இதற்கு, இந்தியர்கள் மத்தியில் நிலவி வரும் வாகனங்கள்மீதான தீராத மோகமே முக்கிய காரணமாக இருக்கின்றன. இதற்கேற்ப, பன்நாட்டு நிறுவனங்கள், அதன் கவர்ச்சியான வாகனங்களை இந்திய சந்தையில் களமிறக்கி அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டில் 4 மாதங்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில், 5வது மாதத்தில் நாம் காலடி வைத்துள்ளோம். ஆனால், அதற்குள்ளாக இந்தியாவில் கணிசமான அளவில் புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சில வாகனங்களும் அறிமுகமாக தயாராக இருக்கின்றன.

இந்த நிலையில், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த பியாஜியோ நிறுவனம் புதிய ரக 200சிசி ஸ்கூட்டரை, பிரத்யேகமாக இந்தியாவிற்காக தயாரித்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஆட்டோகார்ப்ரோ இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம், சற்று அதிகமான சிசி கொண்ட ஸ்கூட்டர்களை, மிகவும் ஸ்டைலிஸான தோற்றத்தில் வடிவமைத்து இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வருகிறது. இதனால், பியாஜியோவின் பைக்குகளைக் காட்டிலும் ஸ்கூட்டர்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாகவே, இந்த நிறுவனம் இந்தியாவில் அதிகளவில், மிகவும் பவருள்ள ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வருகின்றது.

பியாஜியோ நிறுவனம், வெஸ்பா மற்றும் அப்ரில்லா ஆகிய இரண்டு பிராண்டுகளில் இந்தியாவில் வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. இதில், புதிதாக களமிறக்கப்பட இருக்கும் 200 சிசி ஸ்கூட்டர், அப்ரில்லா பிராண்டில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பியாஜியோ நிறுவனத்தின் சிஇஓ டியகோ கிராஃபி (Diego Graffi) கூறியதாவது, "பியாஜியோ நிறுவனம், முக்கிய நிறுவனங்களான ஹோண்டா, டிவிஎஸ், சுஸுகி மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்களைப் போன்று அல்லாமல், தனித்துவமான ஸ்கூட்டர்களையே தயாரிக்கவே விரும்புகிறது. அந்தவகையில்தான், 125சிசி திறனுடைய பிரீமியம் ரக ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வருகின்றோம்" என்றார்.

இதைத்தொடர்ந்தே, 150சிசி-க்கும் அதிகமான பவரைக் கொண்ட ஸ்கூட்டர்கள் இந்தியாவில் களமிறங்க இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோன்று, புதிதாக களமிறங்க இருக்கும் ஸ்கூட்டர் இந்தியாவிற்கான பிரத்யகாமன வடிவமைப்பைப் பெற்றிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் இந்த ஸ்கூட்டருக்கான உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டிலேயே வைத்து கஸ்டமைஸ் செய்யப்பட உள்ளன. இந்த இந்தியன் ஸ்பெஷிஃபிக் 200 சிசி ஸ்கூட்டரை உருவாக்கும் பணியை, பியாஜியோ நிறுவனம், இத்தாலியில் உள்ள அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வைத்து செய்து வருகின்றது.

இந்த புதிய ஸ்கூட்டர் அப்ரில்லா பேட்ஜில் இன்னும் 18 மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடலாம் என்ற உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த நிறுவனம், அப்ரில்லா பிராண்டில் ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரையும், வெஸ்பா பிராண்டில் அர்பன் கிளப் 125 ஸ்கூட்டரையும் அதன் டீலர்கள் ஷோரூமில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








