வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமல்ல இனி பைக் கூட அமேசானில் கிடைக்கும்...!
ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் ஆர்வி 400 எலக்ட்ரிக் பைக் ஆன்லைன் வர்த்தகமான அமோனில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வரும் அமேசான், வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமின்றி அனைத்து விதமான உபகரணங்களையும் விற்பனைச் செய்து வருகின்றது.
அந்தவகையில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏ டூ இசட் வரையிலான பொருட்களை ஆன்லைனில் விற்பனைச் செய்து வருகின்றது.

இந்நிலையில், அமேசான் நிறுவனம், அண்மையில் அறிமுகமான ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் ரிவோல்ட் ஆர்வி400 மாடல் எலக்ட்ரிக் பைக்கிற்கான முன் பதிவை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தகவலை என்டிடிவி ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

திரைப்பட நடிகை அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா-வால் துவங்கப்பட்ட நிறுவனம்தான், ரிவோல்ட் இன்டெல்லிகார்ப்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விற்பனை, அண்மைக் காலங்களாக சரிவைச் சந்தித்து வந்ததன் காரணமாக, அவர் இன்டெல்லிகார்ப் எனும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பைக்கிற்கான முன் பதிவு revoltmotors.com என்ற அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, ஆயிரம் ரூபாய் என்ற முன் தொகையில் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கான ப்ரீ புக்கிங் அமேசானிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை எலக்ட்ரிக் பைக்கி 2 ஆயிரம் முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாக ரிவால்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் வணிக மேம்பாட்டு துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது, "ஆஃப்லைன் வர்த்தகத்தைக் காட்டிலும் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவில் வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் நம்புகிறோம். இதன்காரணமாகவே, ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் அனைவரையும் சென்றடையும் வகையில், ஆன்லைன் வர்த்தகத்தில் அறிமுகம் செய்துள்ளோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு, அதன் சிறப்பான தோற்றமும், திறனும்தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்தியாவில் இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி, மிகப்பெரிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைய இருக்கின்றது" என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய அமேசான் நிறுவனத்தின், இந்தியாவிற்கான இயக்குநர் ஷாலினி, "அமேசான் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆர்வி 400 பைக்கினை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற எலக்ட்ரிக் வாகனங்கள்தான் இந்தியச் சாலைகளை ஆள இருக்கின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரிவோல்ட் ஆர்வி 400 எலக்ட்ரிக் பைக்கால், வாடிக்கையாளர்களிடத்தில் நாங்கள் கூடுதல் வரவேற்பைப் பெற இருக்கின்றோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.
ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் இந்த ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்கின்றது. அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு, 4ஜி சிம் கார்டு பொருத்தக்கூடிய இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை அது பெற்றிருக்கின்றது. மேலும், சிறப்பு வசதியாக எக்சாஸ்ட் சிஸ்டத்தின் ஒலியை செயற்கையாக வெளிப்படுத்தும் வகையில், கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

இதனை, ஸ்மார்ட்போன் வழியாக கன்ட்ரோல் செய்ய முடியும். அதேபோன்று, எக்சாஸ்ட் ஒலியின் டோனையும் மாற்றும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 156 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இது, மணிக்கு 85 கிமீ வேகம் செல்லக்கூடியது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக் ரூ. 1 லட்சம் என்ற டெல்லி ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த பைக்கிற்கு மத்திய அரசின் மானியம் கிடைக்கவும் வாயப்பு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








