உற்சாகத்தில் எலக்ட்ரிக் பைக் ரசிகர்கள்: அதிநவீன ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக் அறிமுக தேதி கசிந்தன...!
நடிகை அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா விற்பனைச் செய்யவிருக்கும், ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகம் தேதி வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் பைக்குகளை வருகின்ற 18ம் தேதி, தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கின் விற்பனைக்கு ஆட்டோமோட்டிவ் அசோசியேஷன் ஆப் இந்தியாவிடம் (ARAI) இருந்து ஒப்புதல் பெறப்பட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட நடிகையான அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா-வால் துவங்கப்பட்ட நிறுவனம்தான் ரிவோல்ட் இன்டெல்லிகார்ப். மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை, தொடர்ச்சியாக சரிவைக் கண்டுவந்ததன் காரணமாக, அவர் இந்த புதிய தொழில் யுக்தியைக் கையாண்டுள்ளார்.

இதன்மூலம், மலிவான விலையில், அதிக தொழில்நுட்பங்களைக் கொண்ட மின்சாரம் சார்ந்த வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். அந்தவகையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கிற்கு, செயற்கை நுண்ணறிவு எனப்படும் பிரத்யேக தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் மேலும், ஆவலைத் தூண்டும் வகையில், ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கில் 4ஜி சிம் கார்டு பொருத்தப்பட்ட இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம், பைக் குறித்த அனைத்து தகவலையும் நம்மால் பெற முடியும். பைக்கின் செயல்திறனை உறுதிப்படுத்தும் வகையில், கடுமையான பரிசோதனைக்கு ரிவோல்ட் பைக்கை அந்த நிறுவனம் உட்படுத்தி வருகின்றது.

அவ்வாறு, ரிவோல்ட் பைக் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அண்மையில் வைரலாகின. அதேசமயம், இந்த பைக்கின் சரிவு திறனைச் சோதனைச் செய்யும் வகையில், 10.2 டிகிரி அளவில், விமானத்தைப் போன்று சாய்வாக வைத்து இயக்கப்பட்டது. அதில், எலக்ட்ரிக் பைக் சரிவைக் காணமால், அதன் நிலை தன்மையை உறுதிச் செய்தது.

இதுபோன்ற பல பரீட்சைகளால் பைக்கின் பாதுகாப்பு தன்மை உறுதிப்படுத்துவதுடன், நம்பத் தன்மையையும் அதிகரிக்க வைக்கின்றது. இதேபோன்று, பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியையும் அந்த நிறுவனம் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. அந்தவகையில், ஃபூல்ப்ரூஃப் மற்றும் ஹை டெசிபல் இன்டர்நெல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நெய்ல் பெனரேஷன், ஷாக் அப்சார்பேஷன், வாட்டர் ப்ரூஃப் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரிவோல்ட் பிராண்டில் முதற்கட்டமாக மூன்று மாடல் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதில், ஹை எண்ட் வேரியண்டிற்கு, ஒரு முழுமையான சார்ஜில் 150 கிமீ தூரம் செல்லும் வகையிலான பேட்டரி பேக் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று, ஆரம்பநிலை பைக்கிற்கு 85 கிமீ தூரம் செல்லும் வகையிலான பேட்டரி பேக் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தம் புதிய எலக்ட்ரிக் பைக்குறித்த ஸ்கெட்ச் டிசைனை ரிவோல்ட் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாநிலத்தின், குர்கான் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், அங்குள்ள மானேசரில் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது. இங்குதான், ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோ இன்டலிஜென்ஸ் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த பைக்கில் இணைத்திருப்பதால், இந்திய இளைஞர்கள் இந்த பைக்கிற்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.


Click it and Unblock the Notifications








