ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சம் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார பைக் மாடலாக ரிவோல்ட் ஆர்வி400 அண்மையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. வரும் ஜூலை 22ந் தேதி இந்த புதிய மின்சார பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், இந்த மின்சார பைக்கிற்கான முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு துவங்கியது.

ரிவோல்ட் இன்டெலிகார்ப் இணையதளம் அல்லது அமேஸான் இணையதளத்தின் மூலமாக ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 மட்டுமே முன்பணம் செலுத்தினால், முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த 4 மாதங்களுக்குள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். வரும் ஜூலை 22ந் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினமே டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட இருக்கிறது.

இந்த புதிய மின்சார பைக் ரூ.1 லட்சம் டெல்லி ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த புதிய மின்சார பைக்கிற்கு பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது இதற்கான முழுமையானத் தகவல்களை பெற முடியும்.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ஸ்மார்ட்போன் மூலமாக இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதனை வைத்து வண்டியின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களையும், வசதிகளையும் பெற முடியும்.

இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 156 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 85 கிமீ வேகமம் வை செல்லும். நான்கு வழிகளில் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய இயலும். இதனால், தினசரி பயன்பாட்டிற்கு மிகச் சிறப்பான மின்சார பைக் மாடலாக இருக்கும்.

இதன் லித்தியம் அயான் பேட்டரியை 15A சாக்கெட் மூலமாக 4 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். பேட்டரியை தனியாக கழற்றி எடுத்துக் கூட சார்ஜ் செய்ய முடியும். சமையல் சிலிண்டர் மாற்றுவது போல, முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை அருகிலுள்ள ரிவோல்ட் டீலரிடமிருந்து வாங்கலாம். ஸ்மார்ட்போன் மூலமாகவே ஆர்டர் செய்யலாம்.

புதிய ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக் ரிபெல் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ஸ்மார்ட்போனுடன் இணைத்து பல்வேறு வசதிகளை பெற முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








