முன்பணம் தேவையில்லை... வெறும் ரூ.2,999 மாதத் தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!
முதல்முறையாக சுலப மாதத் தவணை திட்டத்தில் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள், மாதத் தவணை திட்டங்கள் மற்றும் இதர விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு பைக்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், நடிகை அசின் கணவருமான ராகுல் ஷர்மாவின் ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாக ஆர்வி400 பைக் வந்துள்ளது. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் மாடலாக ரிவோல்ட் ஆர்வி400 பைக் நிறுவனத்தால் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மாடல்கள்
ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரண்டு மாடல்களில் புதிய ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், ஆர்வி400 மாடல் பேஸ் மற்றும் பிரிமீயம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.
ஆர்வி300 மாடல் சற்று குறைவான செயல்திறன் கொண்டதாகவும், ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் அதிக செயல்திறன் மிக்கதாகவும் வந்துள்ளன.

முன்பதிவு
ரிவோல்ட் ஆர்வி400 பைக்கிற்கு கடந்த ஜூன் 25ந் தேதி முதல் நிறுவனத்தின் இணையதளத்திலும், ஜூலை 5ந் தேதி முதல் அமேஸான் தளத்திலும் முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.1,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரு பைக் மாடல்களுக்கும் நாளை காலை 11 மணிமுதல் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசைன்
புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் டிசைன் மிக துள்ளலாகவும், இளைஞர்களை கவரும் நேக்கட் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் உள்ளது. குறிப்பாக, இதன் ஹெட்லைட் உள்ளிட்ட பாகங்கள் கேடிஎம் ட்யூக் மாடல்களை நினைவூட்டுகிறது.

முக்கிய அம்சங்கள்
இந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றுள்ளது. 17 அங்குல அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

செயல்திறன்
புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் 2.7kW பேட்டரியும், 3,000 வாட் மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். சிட்டி, ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்த பைக் மணிக்கு 65 கிமீ வேகம் வரை பயணிக்கும் திறன் பெற்றதாக இருக்கிறது.

பேட்டரி திறன்
இந்த மின்சார பைக்கின் மின்கலத்தில் முழுமையாக மின்சாரத்தை நிரப்பினால், 156 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று அராய் அமைப்பு சான்ற அளித்துள்ளது. சாதாரண 15A சாதாரண சார்ஜர் மூலமாக, மின்கலத்தில் மின்சாரத்தை முழுமையாக நிரப்புவதற்கு 4 மணிநேரம் பிடிக்கும்.

பேட்டரியை கழற்றி மாட்டலாம்
ஓட்டுதல் முறை மற்றும் தட்பவெப்ப நிலைகளால், இந்த பயண தூரம் என்பது, நடைமுறையில் சற்றே குறைவாக இருக்கலாம். இந்த பைக் 80 முதல் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் பேட்டரியை கழற்றி மாட்டும் வசதியும் இருக்கிறது. சார்ஜ் தீர்ந்து போனால், சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியும். அவசரத்திற்காக போர்ட்டபிள் சார்ஜரும் கொடுக்கப்படுகிறது. இதன்மூலமாக, ஓரளவு பேட்டரியை சார்ஜ் செய்து தொடர்ந்து பயணிக்க முடியும்.

எல்இடி ஹெட்லைட்
இந்த பைக்கில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. புஷ் பட்டன் ஸ்டார்ட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 4ஜி எல்டிஇ சிம் கார்டு இணைக்கப்பட்டு பல்வேறு வசதிகளை நேரடியாக பெறும் வகையில் வந்துள்ளது.

விசேஷ மொபைல் ஆப்
விசேஷமான ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் அப்ளிகேஷன் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக பைக்கின் இருப்பிடத்தை கண்டறியும் வசதி, சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை ஆர்டர் செய்து டோர் டெலிவிரி பெறும் வசதி, பைக் குறிப்பிட்ட எல்லையை விட்டு வெளியேற முடியாத வகையில் கட்டுப்படுததும் ஜியோ ஃபென்சிங் வசதி, நேவிகேஷன் வசதிகளை பெற முடியும்.

சைலென்சர் ஸ்பீக்கர் சிஸ்டம்
இந்த பைக்கில் ஸ்பீக்கர் சிஸ்டம் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைலென்சர் சப்தத்தை செயற்கையாக ஒலி எழுப்பும் வகையில் இது செயல்படும். மேலும், ஓட்டுபவர் விரும்பும் வகையில் 4 விதமாக சைலென்சர் சப்தத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

வண்ணத் தேர்வுகள்
புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் இரண்டு விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ரெபல் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது.

விலை விபரம்
புதிய ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் புதுமையான முறையில் மாதத் தவணைத் திட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆர்வி300 பைக்கிற்கு ரூ.2,999 மாதத் தவணையிலும், ஆர்வி400 பேஸ் மாடலுக்கு ரூ.3,499 மாதத் தவணையும், பிரிமீயம் மாடலுக்கு ரூ.3,999 மாதத் தவணையிலும், 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவுடன் வந்துள்ளன. அதாவது, முன்பணம் இல்லாமல், இலவச பதிவு ஆகியவற்றுடன் வந்துள்ளது.

விற்பனை திட்டம்
முதல்கட்டமாக டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்தக்கட்டமாக, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

அட்டகாசமான வாரண்டி
புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. பேட்டரிக்கு வரம்பில்லா கால அளவுடன் வாரண்டியும், 3 ஆண்டுகளில் ஒரு ஜதை டயர்களை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு 10,000 கிமீ தூரத்திற்கு ஒரு முறை பராமரிப்பு இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








