650 ட்வின் வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட ராயல் என்பீல்ட்...! என்ன தெரியுமா...?
ராயல் என்பீல்ட் நிறுவனம் தனது புதிய வெளியீடான 650 ட்வின் மோட்டார்சைக்கிளுக்கான சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் மாடல்களை கடந்த ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதிநவீன வசதிகளுடன் களமிறங்கிய இந்த ட்வின் மோட்டார்சைக்கிள்கள் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், இந்திய சந்தையில் மலிவான விலையில் ட்வின் சிலிண்டர் கொண்ட மோட்டார் சைக்கிள்களாக இவை இருக்கின்றன. இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 648 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில், இன்டர்செப்டார் 650 ரூ. 2.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 ரூ. 2.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்திய வாகன ஓட்டிகளிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிளின் அக்ஸசெரீஸ்களை ராயல் என்பீல்ட் நிறுவனம் தற்போது அப்டேட் செய்துள்ளது. அந்த வகையில், புதிதாக அல்லாய் வீல் மற்றும் பனி விளக்குகள் ஆகிய இரண்டு அக்செரீஸ்களை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு, தற்போது குரோம் பினிஸில் 9 புதிய அல்லாய் வீல்கள் ராயல் என்பீல்டு ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை ரூ. 12 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பனி விளக்கிற்கு ரூ. 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் 650 பைக்குகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் பிரத்யேகமான வண்ணக் கலவைகளில் விற்பனையாகி வரும் புதிய அல்லாய் வீல்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம். இந்த அக்ஸசெரீஸ்களுக்கு இரண்டாண்டு வாரண்டியும் கொடுக்கப்படுகிறது.
சமீபத்தில், மலிவான விலையில் வாங்கிய அலாய் வீல் மோட்டார்சைக்கிள் சென்றுக்கொண்டிருந்தபோது, பைக்கின் வேகத்தினுடைய அழுத்தம் தாங்க முடியாமல் நொருங்கி விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சமீபத்தில்தான் அரங்கேறியது. ஆகையால், இதுபோன்று ஆபத்தை விளைவிக்கும் வெளிச்சந்தை அக்ஸசெரீஸ்களைத் தவிர்த்து, வாகன நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் இதுபோன்ற அக்செரீஸ்களைப் பயன்படுத்தினால், அவை பாதுகாப்பான பயணத்தை அளிக்கும்.


Click it and Unblock the Notifications








