விற்பனையில் அசத்தி வரும் ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள்!
அறிமுகம் செய்யப்பட்டது முதல் ராயல் என்ஃபீல்டு 650 சிசி மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் அசத்தி வருகின்றன. கடந்த மாதமும் மிகச் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

கடந்த ஆண்டு நவம்பரில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சக்திவாய்ந்த 650 சிசி மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 என்ற பெயரில் வந்த இந்த மோட்டார்சைக்கிள்கள் இரட்டையர்களாக குறிப்பிடப்படுகின்றன.

வழக்கமான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வந்த இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேபோன்று, சக்திவாய்ந்த எஞ்சினுடன் வந்த புதிய கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், விற்பனைக்கு வந்தது முதல் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களுமே விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. அதாவது, மாதத்திற்கு 2,000 யூனிட்டுகளுக்கும் மேலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

கடந்த மாதமும் 2,172 யூனிட்டுகள் விற்பனையாகி ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் 650 இரட்டையர் மோட்டார்சைக்கிள்கள் அசத்தி உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 15,000 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது உள்நாட்டு விற்பனை நிலவரம். ஏற்றுமதியிலும் இதே அளவுக்கான விற்பனையை பதிவு செய்து வருவதும் கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம்.

இந்த இரட்டையர் மாடல்களானது 400 சிசி முதல் 750 சிசி வரையிலான மோட்டார்சைக்கிள்கள் செக்மென்ட்டில் மிக அதிக எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. அதாவது, எந்தவொரு மாடலும் இந்த இரட்டையர்களை விற்பனையில் நெருங்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 இரட்டையர் மோட்டார்சைக்கிள்களுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதற்கு விலை மிக முக்கிய காரணம். ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் ரூ.2.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், கான்டினென்டல் ஜிடி ரூ.2.91 லட்சத்திலும் அறிமுகம் செய்யப்பட்டன.

இதுவே இந்த மோட்டார்சைக்கிள்கள் பெரும் வரவேற்பை பெறுவதற்கான அடிப்படை காரணம். மேலும், இந்த மோட்டார்சைக்கிள்களில் சக்திவாய்ந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் உள்ள இரட்டை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அளிக்கப்படுகிறது. முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் சாதாரண ஃபோர்க்களும், பின்புறத்தில் ட்வின் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரும் உள்ளன. மொத்தத்தில் பணத்திற்கு மதிப்புவாய்ந்த மாடல்களாக பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








