சக்திவாய்ந்த எஞ்சினுடன் களமிறங்கும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!
அண்மையில் விற்பனைக்கு வந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட அதே 650சிசி எஞ்சினுடன் புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய
சக்திவாய்ந்த புதிய எஞ்சின் ஆப்ஷனுடன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அட்வென்ச்சர் ரக மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. குறிப்பாக, இமயமலையில் சாகசப் பயணம் மேற்கொள்வோருக்காகவே இந்த மாடல் உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டது.

துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தரமற்ற உதிரிபாகங்கள் மற்றும் எஞ்சின் பிரச்னைகள் இந்த மோட்டார்சைக்கிளின் வர்த்தகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியது. மேலும், எஞ்சின் கூடுதல் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் வாடிக்கையாளர் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக புதிய ஹிமாலயன் மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

அண்மையில் விற்பனைக்கு வந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட அதே 650சிசி எஞ்சினுடன் புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

தற்போதைய ஹிமாலயன் மாடலில் இருக்கும் 411சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில், இரட்டை சிலிண்டர் அமைப்புடைய புதிய 650சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய எஞ்சினை பொருத்தும் விதத்தில், ஹிமாலயன் 650சிசி மாடலில் சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். சேஸீ அமைப்பும் மிக வலுவானதாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இந்த குறைகளை எல்லாம் களைந்து சிறந்த மாடலாக நிலைநிறுத்துவதற்கும் ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

நீடித்த உழைப்பை வழங்கும் தரமான உதிரிபாகங்கள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷனுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

நடுத்தர எடை வகை பிரிவு மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மாடல் மிக சிறந்த தேர்வாக அமையும் என்று ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








