ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு கூடுதல் கால வாரண்டி திட்டம்!
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு கூடுதல் கால வாரண்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜாவா மற்றும் பெனெல்லி உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய பைக் மாடல்களால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ராயல் என்ஃபீல்டு தீவிரமாக இறங்கி இருக்கிறது. பெராக் பைக்கிற்கு போட்டியாக புதிய சிங்கிள் சீட் அமைப்புடைய க்ளாசிக் 350 மாடல் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், புல்லட் மோட்டார்சைக்கிளைவிட விலை குறைவான மாடல்களை களமிறக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கான அடுத்த முயற்சியிலும் ராயல் என்ஃபீல்டு இறங்கி இருக்கிறது.

அதாவது, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு முதல் இரண்டு ஆண்டு கால வாரண்டி காலத்தை தவிர்த்து, கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வாரண்டி திட்டத்தை வழங்குவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. Ride Sure என்ற பெயரில் இந்த திட்டத்தை ராயல் என்ஃபீல்டு வழங்குகிறது.

Ride Sure திட்டமானது மூன்று விதமான பேக்கேஜில் கிடைக்கும். அடிப்படை திட்டத்தில் கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படும். பேஸிக் பிளஸ் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் வாரண்டி மட்டுமின்றி, சாலை அவசர உதவி திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

Ride Sure Premium பேக்கேஜில் மேற்கண்ட திட்டங்களில் இருக்கும் அம்சங்கேளுடன் கூடுதலாக கேபிள் மற்றும் பிரேக் பேடுகள், பிரேக் ஷூக்களை மாற்றித் தருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இது கூடுதல் மதிப்பை தரும் வாரண்டி திட்டமாக பார்க்க முடியும்.

கூடுதல் வாரண்டி காலத்தை வழங்கும் ரைடு ஷ்யூர் திட்டத்தின் கீழ் எஞ்சின் சிலிண்டர் ஹெட், எரிபொருள் கலன், புஷ்ராடு கிட், எஞ்சின் பிளாக் அசெம்பிளி, கார்புரேட்டர், சென்சார்கள், டிரான்ஸ்மிஷன், மேக்னெட்டோ கவர், சப் ஃப்ரேம், பிஸ்டன், கனெட்டிங் ராடு அசெம்பிளி, ஸ்பிராக் க்ளட்ச், எரிபொருள் குழாய், ப்ரேம் அசெம்பிளி, த்ராட்டில் பாடி, கேம் பிளேட், ஸ்டார்ட்டர் மோட்டார், ரியர் ஷாக்கர், ஹைட்ராலிக் டேப்பெட், எஞ்சின் பியரிங்குகளுக்கு வாரண்டி வழங்கப்படும்.

இசியூ சாதனம், எஞ்சின் ப்ளாஷர் யூனிட், ஆஎச் கவர், செயின் ஸ்டே, ஃப்யூவல் இன்ஜெக்டர், வால்வு, வால்வு இணைப்பு பாகங்கள், முன்புற ஃபோர்க் அசெம்பிளி, பிரேக் காலிபர்கள், கிராங்க் கேஸ், எஞ்சின் ஃபாஸ்ட்னர்க்ஸ, ஆயில் கூலர், ஆயில் பம்ப், ஹெட்லேம்ப் கேஸிங் மற்றும் ஃப்யூவல் பம்ப் ஆகியவற்றிற்கும் இந்த கூடுதல் வாரண்டி காலம் பொருந்தும்.

கூடுதல் வாரண்டி காலத்தின் கீழ் 4 ஆண்டுகள் அல்லது 50 கிமீ தூரத்திற்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்க விஷயமாக இருக்கும்.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








