9.5 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய இலக்கு... ராயல் என்பீல்டு முதலீடு செய்யப்போகும் தொகை இதுதான்
2019-20ம் நிதியாண்டில், 9.5 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய இருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழக தலைநகர் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ரெட்ரோ-கிளாசிக் மோட்டார் சைக்கிள்களால் அறியப்படும் ராயல் என்பீல்டு நிறுவனம், ஈச்சர் மோட்டார்ஸின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், 2019-20ம் நிதியாண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 700 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் 2019-20ம் நிதியாண்டில் 9.5 லட்சம் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யப்படும் தொகையானது, புதிய பிளாட்பார்ம்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படவுள்ளது. சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் வடகல் என்ற பகுதியில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இதன் இரண்டாவது பேஸ் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதனை நிறைவு செய்யவும் இந்த முதலீட்டு தொகை பயன்படுத்தப்படவுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதலீடு செய்வது குறித்து ஈச்சர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சித்தார்த் லால் கூறுகையில், ''பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மாறுவதில் ராயல் என்பீல்டு இந்த ஆண்டு கவனம் செலுத்தும்.

வல்லம் வடகல் பிளாண்ட்டில் இரண்டாவது பேஸில், வணிக ரீதியிலான உற்பத்தி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கட்டப்பட்டு வரும் எங்கள் டெக்னாலஜி சென்டரின் கட்டுமான பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது'' என்றார். இதனிடையே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே.தாசரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2018-19ம் நிதியாண்டில் மொத்தம் 826,098 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீத வளர்ச்சியாகும். 2018-19ம் நிதியாண்டில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட 826,098 மோட்டார் சைக்கிள்களில், உள்நாட்டில் விற்பனையான பைக்குகளின் எண்ணிக்கை 805,273 (1 சதவீத வளர்ச்சி). அதே சமயம் ஏற்றுமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 20,825 (8 சதவீத வளர்ச்சி).


Click it and Unblock the Notifications








