மீண்டும் பார்முக்கு திரும்பிய ஹீரோ... இரு சக்கர வாகன விற்பனை அதிகரிப்பால் உற்சாகம்...
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த உலகின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 6,52,028 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 77,662 யூனிட்கள் அதிகம் ஆகும்.

இதன் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போதைய சூழலில் இந்திய ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. மார்க்கெட்டில் நிலவும் மந்த நிலையால், அனைத்து முன்னணி நிறுவனங்களுமே தடுமாறி கொண்டுள்ளன.

இந்த சூழலில் ஹீரோ மோட்டோகார்ப் வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 6,17,215 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து பார்த்தால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை 6 லட்சம் யூனிட்களை கடந்தது அதுவே முதல் முறை. அதன்பின் வந்த மே மாதத்தில் கூடுதலாக சுமார் 35 ஆயிரம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ள ஹீரோ மோட்டோகார்ப்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் சார்ந்த எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை ஹீரோ நிறுவனம் கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதில், எக்ஸ்பல்ஸ் 200 கார்புரேட்டர் வேரியண்ட்டின் விலை 97 ஆயிரம் ரூபாயாகவும், ப்யூயல் இன்ஜெக்ஸன் வேரியண்ட்டின் விலை 1.05 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் எக்ஸ்பல்ஸ் 200டி மாடலின் விலை 94 ஆயிரம் ரூபாயாகவும், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலின் விலை 98,500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதுதவிர 2 புதிய ஸ்கூட்டர் மாடல்களையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்டேட் செய்யப்பட்ட ப்ளஷர் ப்ளஸ் மற்றும் மேஸ்ட்ரோ 125 ஆகியவைதான் அந்த இரண்டு ஸ்கூட்டர்கள்.

இதில், மேஸ்ட்ரோ 125தான் இந்தியாவின் முதல் ப்யூயல் இன்ஜெக்ஸன் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் 3 மோட்டார்சைக்கிள்கள், 2 ஸ்கூட்டர்கள் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதத்தில் மொத்தம் 5 புதிய தயாரிப்புகளை களமிறக்கியுள்ளது. இவற்றின் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வரும் மாதங்களில் நல்ல விற்பனை எண்ணிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








