ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 விற்பனை அமோகம்... 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தல்...
ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 மாடல் 31 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய நிலையில் ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜாவாவின் இந்திய வருகைக்கு பின் அதன் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 குறிப்பிடத்தக்க அளவில் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் 4,949 தண்டர்பேர்டு 350 மாடல் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 3,772 ஆக மட்டுமே இருந்தது.

இதன்மூலம் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 மாடல் 31 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லைன்அப்பில் தண்டர்பேர்டு சீரிஸ் மூன்றாவது இடத்தை பிடிக்க இந்த எண்கள் உதவி செய்துள்ளன.

ஜாவா 300 மாடலுக்கு நேரடி போட்டியாளராக ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிள் திகழ்ந்து வருகிறது. இந்த இரண்டு மாடல்களிலும், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரெட்ரோ-மாடர்ன் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 சமீபத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை பெற்றது. அத்துடன் முக்கியமான சில வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டன. இதன் காரணமாக அதன் விலை கணிசமாக உயர்ந்தது. இருந்தபோதும் கூட விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிள் மாடலில், 346 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,250 ஆர்பிஎம்மில் 19.8 எச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 110 கிலோ மீட்டர்கள் (தோராயமாக). இதில், 20 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் தண்டர்பேர்டு 350எக்ஸ் என்ற மாடலையும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








