விற்பனைக்கு வரும் முன்பே ஜிக்ஸெர் 155 பைக்கின் புகைப்படங்கள் கசிந்தன...!
சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு களமிறக்க உள்ள சுஸுகி ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சுஸுகி நிறுவனம், அதன் பிரபல மாடலான 2019 ஜிக்ஸெர் 155 மாடலை கூடிய விரைவில் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கை மிகவும் அழகான மாடலில் தயார்செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், அண்மையில் அறிமுகமான ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல்களைப் போன்ற மாற்றத்தைப் பெற்றிருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், வெறும் இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உறுதி செய்யும் வகையில், விரைவில் களமிறங்க இருக்கும் 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த புகைப்படங்கள், ஜிக்ஸெர் 155 பைக் மிகவும் அழகான வடிவத்தைப் பெற்றிருப்பதை உறுதிச் செய்யும் வகையில் அமைந்துள்ளன.

அந்தவகையில், தற்போது கசிந்துள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கையில், அறிமுகத்திற்கு காத்திருக்கும் சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் பெட்ரோல் டேங்க் மிகவும் பரந்தளவிலான தோள்பட்டைப் போன்ற லைனைப் பெற்றிருக்கின்றது. மேலும், அது ஷார்ப்பாகவும், கட்டுமஸ்தான உடல்வாகையும் பெற்றதைப்போன்று காட்சியளிக்கின்றது.

இத்துடன், பைக்கின் ஹெட்லைட், டெயில் லைட், இன்டிகேட்டர் அனைத்திற்கும் எல்இடி தரத்திலான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது முந்தைய மாடலைக் காட்டிலும் சற்று புதுமையான தோற்றத்தைப் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, புதிய 2019 சுஸுகி ஜிக்ஸெர், அதன் முந்தைய மாடலைக் காட்டிலும் கணிசமான புதிய வடிவத்தைப் பெற்றிருக்கின்றதை இந்த புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.

மேலும், வெண்மை நிற பேக்லைட் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் புதிய அம்சமாக இந்த பைக்கில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களில் இது ஆரஞ்சு நிற பின் விளக்கைக் கொண்டதாக இருக்கின்றது.

இத்துடன் மிக முக்கியமான மாற்றமாக, இந்த பைக்கின் இருக்கைகள் ஷார்ப்பான அமைப்பையுடைய, ஸ்ப்லிட் இருக்கைகளைப் பெற்றுள்ளது. 2019 சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலிலும் இதுபோன்ற இருக்கைகள்தான் பொருத்தப்பட்டுள்ளன.

2019 சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்கில் 155சிசி திறனை வெளிப்படுத்தும் ஏர் கூல்ட், ப்யூவல் இன்ஜெக்டட் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது, 13.9 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த பைக்கில் சிறப்பான ரைடிங் அனுபவத்திற்காக, அதன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோசாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன் பாதுகாப்பு வசதியாக, டிஸ்க் பிரேக்குடன் கூடிய சிங்கிள் சேனல் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது, வாகன ஓட்டியின் பாதுகாப்பு பயணத்திற்கு ஏதுவாக அமையும். இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட இந்த பைக் ரூ. 95 ஆயிரம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், இந்த பைக் இந்திய இருசக்கர வாகன சந்தையில் களமிறங்குமேயானால், யமஹா நிறுவனத்தின் எஃப்இசட்-எஸ், ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஹார்னட் 160ஆர் மற்றும் டிவிஎஸ் நிறுவனத்திந் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி உள்ளிட்ட மாடல்களுடன் கடுமையான போட்டியைச் சந்திக்கும்.

சுஸுகி நிறுவனம், நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்த இரண்டு புதிய மாடல் ஜிக்ஸெர் பைக்குகளை அண்மையில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அவ்வாறு, ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 ஆகிய இரு மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இதில், ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலானது மலிவு விலையை உடைய பிரிமியம் ரக பைக்காக களமிறக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, எஸ்எஃப்250 மாடலின் நேக்கட் வெர்ஷனையும் அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்த செய்திகள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், விரைவில் அறிமுகமாக இருக்கும் சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்கின் புகைப்படங்கள் கசிந்து, அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அநேகமாக இன்னும் ஒரு சில மாதங்களிலேயே அறிமுகமாகிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








