அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்!
சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 பைக்கின் மோட்டோஜீபி மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் இந்த பைக்கின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 பைக் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் விலை குறைவான சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அட்டகாசமான ஸ்டைல், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலையில் கிடைப்பதால் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 பைக்கின் சாதாரண மாடல் கருப்பு மற்றும் சில்வர் வண்ணக் கலவைகளில் கிடைக்கிறது. இந்த நிலையில், சுஸுகி நிறுவனத்தின் மோட்டோஜீபி பைக்குகளை பிரதிபலிக்கும் விசேஷ வண்ணக் கலவையிலான பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சுஸுகி ஜிக்ஸெர் 155 எஸ்எஃப் மோட்டோஜீபி எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. நீல வண்ணத்தில் சுஸுகி மோட்டோஜீபி பைக்குகளில் கொடுக்கப்படும் வெள்ளை மற்றும் கருநீல எழுத்துக்கள் கொண்ட பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களுடன் இந்த பைக் அசத்தலாக இருக்கிறது.

சுஸுகியின் மோட்டோஜீபி பைக் பந்தய அணியான எக்ஸ்டார் பெயரும் இந்த பைக்கின் ஃபேரிங் பேனல்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், சக்கரங்களில் மஞ்சள் வண்ண ஸ்டிக்கர் அலங்கராமும் அசத்துகிறது. மொத்தத்தில் சுஸுகி மோட்டோஜீபி பந்தய பைக்குகளை போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 எஸ்எஃப் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த பைக் இந்தியாவிற்கு வந்தது.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதன் 155 சிசி எஞ்சினிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது.

இந்த பைக்கில் இருக்கும் 155 சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 13.9 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பதோடு, 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சுஸுகி ஜிக்ஸெர் 155 எஸ்எஃப் ஸ்போர்ட்ஸ் பைக்கில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் கூடிய முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இதன் முக்கிய பாதுகாப்பு அம்சமாக கூறலாம்.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 எஸ்எஃப் மோட்டோஜீபி எடிசன் மாடலுக்கு ரூ.1.10 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண வண்ணக் கலவை கொண்ட ஸ்டான்டர்டு மாடலைவிட ரூ.800 மட்டுமே கூடுதல் விலையில் அதிக சிறப்பம்சங்கள் இந்த புதிய மாடல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் சுஸுகி ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்கின் மோட்டோஜீபி எடிசன் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் ரூ.1.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சுஸுகி ஜிக்ஸெர் 155 எஸ்எஃப் மோட்டோஜீபி எடிசன் மாடலானது யமஹா ஆர்15, கேடிஎம் ஆர்சி125, பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். பட்ஜெட் விலை ஸ்போர்ட்ஸ் பைக்கை விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications








