இந்தியாவில் இவ்வளவு டூவீலர்களை விற்பனை செய்திருப்பது இதுதான் முதல் முறை... சுஸுகி அபார வளர்ச்சி...
சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2018-19ம் நிதியாண்டில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2018-19ம் நிதியாண்டு, கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது 2019-20ம் நிதியாண்டு தொடங்கியுள்ளது. முன்னதாக கடந்த நிதியாண்டில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த சேல்ஸ் ரிப்போர்ட் வரிசையாக வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா (Suzuki Motorcycles India) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த நிதியாண்டில், சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், மொத்தம் 7,47,506 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டில், மொத்தமாக 5,74,711 வாகனங்களை மட்டுமே சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன்மூலம் 30 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

அத்துடன் கடந்த நிதியாண்டுதான் இந்தியாவில் சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான ஆண்டாகும். ஏனெனில் இதற்கு முன்பாக இந்தியாவில் ஒரே நிதியாண்டில் இவ்வளவு அதிகமான இரு சக்கர வாகனங்களை சுஸுகி நிறுவனம் விற்பனை செய்ததில்லை. இத்தனைக்கும் கடந்த நிதியாண்டில் சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய லான்ச்சாக இருந்தது பர்க்மேன் ஸ்ட்ரீட் மட்டுமே.

இருந்தபோதும் கூட இந்தியாவில் தனது அதிகபட்ச விற்பனையை பதிவு செய்து அசத்தியுள்ளது சுஸுகி. ஆனால் இதில் சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பர்க்மேன் ஸ்ட்ரீட் மேக்ஸி ஸ்கூட்டரின் விற்பனை ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக பர்க்மேன் ஸ்ட்ரீட் விற்பனையில் சோபிக்கவில்லை.

தற்போதைய நிலையில் இந்தியாவின் 125 சிசி செக்மெண்ட்டில் சுஸுகி அக்ஸெஸ் ஸ்கூட்டர்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் போட்டியாளர்களை காட்டிலும் சுஸுகி அக்ஸெஸ் ஸ்கூட்டரின் விற்பனை மிக சிறப்பாக உள்ளது. மோட்டார் சைக்கிள்கள் என எடுத்து கொண்டால், ஜிக்ஸெர் சீரிஸ் மூலமாக அந்நிறுவனத்தின் மொத்த விற்பனை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் மற்றொரு குறிப்பிடத்தகுந்த மைல்கல்லையும் எட்டியுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள அந்நிறுவனத்தின் பிளாண்ட்டில் இருந்து 40 லட்சமாவது வாகனம் வெளிவந்துள்ளது. 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட தனது மாடல்களை சுஸுகி நிறுவனம் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் மூலம் அப்டேட் செய்துள்ளது.

அதே நேரத்தில் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட மாடல்கள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுஸுகி நிறுவனம் மேற்கொள்ளவுள்ள அடுத்த மிகப்பெரிய லான்ச் ஜிக்ஸெர் 250ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த மோட்டார் சைக்கிள் மிகவும் தாமதம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








