இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் டீசர் வீடியோ வெளியீடு!
டார்க் நிறுவனம், இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வருகின்றது. இந்த நிலையில், அந்த எலக்ட்ரிக் பைக்குறித்த டீசர் வீடியோ ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையில் வைத்து இயக்கப்படும் அந்த பைக், இசையைப் போன்று ரம்மியான ஒலியை எழுப்பிச் செல்வது பார்ப்போரிடையே ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள புனே நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம், மின் மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. நாட்டின் முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இந்த நிறுவனம், தற்போது டார்க் டி6எக்ஸ் என்ற புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வருகின்றது.

இந்த புதிய எலக்ட்ரிக் பைக் குறித்த விலை மற்றும் முழுமையான தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனாலும், பைக்கிற்கான ப்ரீ புக்கிங் மட்டும் அண்மைக் காலங்களாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டார்க் டி6எக்ஸ் பைக்கை, அந்த நிறுவனம் புனேவில் உள்ள சாலையில் வைத்து பரிசோதனைச் செய்யும் காட்சிகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த மோட்டார்சைக்கிள் குறித்த டீசர் வீடியோ ஒன்றை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விற்பனைக்கு அறிமுகவாதற்கு முன்னதாகவே வெளியாகியிருக்கும் இந்த வீடியோ, பைக் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதேசமயம், இந்த வீடியோக் காட்சியில் பைக் குறித்த தகவல் எதுவும் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால், பைக் குறித்த சில முக்கிய தகவல்களை மட்டும் அந்த நிறுவனத்தின் அஃபீசியல் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தோமேயானால், டார்க் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக், ஸ்ட்ரீட் பைட்டர் ஸ்டைலில் உருவாகி வருவது தெரிகிறது. மேலும், இது இந்தியாவின் முதல் பெர்ஃபார்மென்ஸ் எலக்ட்ரிக் பைக்காகவும் இருக்கின்றது.

இந்த பைக் அதிகபட்சமாக 27என்எம் டார்க்கை வெளியிடுவதே, அவ்வாறு அழைப்பதற்கு காரணமாக இருக்கின்றது. அதேபோன்று, இது அதிகபட்சமாக 6kW பீக் பவர் மற்றும் சிங்கிள் ஸ்பீட் டிரான்மிஷனை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ள இந்த பைக்கில், அந்த நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள டிஐஆர்ஓஎஸ் (Tork Intuitive Response Operating System) என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது. இது, ரைடரின் ஸ்டைலை டேடாவில் இருந்து அல்லாமல் நேரடியாக சேகரித்து வைத்துக்கொள்ளும். மேலும், பவர் மேனேஜ்மென்ட், பயண தூரம் முன்னறிவிப்பு உள்ளிட்ட தகவலை வழங்க உதவும்.

இத்துடன், முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டிஎஃப்டி ஸ்கிரீன், ஜிபிஎஸ், யுடிலிட்டி ஸ்டோரேஜ், கிளவுட் கனெக்டிவிட்டி, ஆண்டி தெப்ட் சிஸ்டம், ஜியோ பென்ஸிங் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் மொபைல் போன் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

அதேசமயம், இந்த பைக்கின் அதீத சக்திக்காக 72Ah திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கான பேட்டரிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்படுகின்றது. அதேசமயம் இதன் மற்ற பாகங்கள் உள்நாட்டில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து மட்டுமே பெறப்படுகிறது. இதனால், இந்த பைக்கின் 90 சதவீத பாகங்கள் உள்நாட்டு தயாரிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

மேலும், இந்த பைக்கில் ரைடரின் இருக்கைக்கு அடியில், சப் ஃப்ரேமுடன் ட்ரெல்லிஸ் எனப்படும் ஃப்ரேம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃப்ரேமில்தான், பைக்கின் பேட்டரி, எஞ்ஜின் உள்ளிட்ட சில முக்கிய பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பும், பின் பக்கத்தில் மோனோசாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன் பாதுகாப்பு வசதியாக முன்பக்கத்தில் 267mm கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 220mm டிஸ்க் பிரேக்கும், சிங்கிள் சேனல் சிபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக முன்பக்கத்தில் 80/100-17 அளவு கொண்ட டயரும், பின்பக்கத்தில் 110/80-17 அளவு கொண்ட டயரும் பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications