யூஸ்டு பைக் விற்பனையில் இறங்குகிறது ட்ரையம்ஃப் நிறுவனம்!
இந்தியாவில், பயன்படுத்தப்பட்ட பைக்குகளை வாங்கி விற்பனை செய்யும் வர்த்தகத்தை துவங்குவதற்கு ட்ரையம்ஃப் பைக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை காணலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் பைக் நிறுவனம் இந்தியாவின் பிரிமீயம் ரக பைக் மார்க்கெட்டில் பிரபலமாக விளங்குகிறது. வாடிக்கையாளர்களின் தேர்வில் ட்ரையம்ஃப் நிறுவனத்தின் பிரிமீயம் பைக்குகள் முதன்மையான தேர்வாகவும் இருந்து வருகிறது.

இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கி 5 ஆண்டுகளில் அந்த நிறுவனம் 6,000 பைக்குகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. மிக வலுவான வர்த்தகத்தை பெற்றிருக்கும் ட்ரையம்ஃப் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் விதத்தில் யூஸ்டு பைக் வர்த்தகத்தையும் துவங்க திட்டமிட்டுள்ளது.

பண்டிகை காலம் துவங்குவதற்கு முன்பாக வரும் ஆகஸ்ட் மாத வாக்கில் பயன்படுத்தப்பட்ட பைக்குகளின் விற்பனையை துவங்குவதற்கு ட்ரையம்ஃப் திட்டமிட்டுள்ளது. தற்போது புதிய ட்ரையம்ஃப் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் சராசரி வயது 37 ஆக இருக்கிறது.

இந்த நிலையில், இளம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், யூஸ்டு பைக் விற்பனையையும் துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது ரூ.8 லட்சம் விலையிலிருந்து ட்ரையம்ஃப் பைக்குகள் கிடைக்கின்றன.

இதுவே யூஸ்டு பைக் வர்த்தகத்தை துவங்கும்போது ரூ.5 லட்சம் முதல் ட்ரையம்ஃப் பைக்குகள் நல்ல கண்டிஷனில் கிடைக்கும். ஏனெனில், யூஸ்டு ட்ரையம்ஃப் பைக்குகளை வாங்கி முழுவதுமாக சரிப்படுத்தி விற்பனை செய்ய இருக்கிறது. மேலும், வாரண்டியையும் வழங்க உள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமின்றி பயன்படுத்தப்பட்ட ட்ரையம்ஃப் பைக்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதன்மூலமாக, தனது வர்த்தகத்தை மிக வலுவாக மாற்றிக் கொள்ள முடியும் என்று ட்ரையம்ஃப் கருதுகிறது.

புதிய ட்ரையம்ஃப் பைக்குகளை வாங்குவோரும், சிறந்த மறுவிற்பனை மதிப்பை பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. பயன்படுத்தப்பட்ட பைக்குகளை வாங்கி விற்பனை செய்வது குறித்தது ட்ரையம்ஃப் நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications