வதந்திக்கு முற்று புள்ளி வைத்த டிவிஎஸ்: புதிய உத்வேகம் பெறும் ஜுபிடர் கிராண்ட்.. விரைவில் அறிமுகம்!
டிவிஎஸ் நிறுவனம், அதன் டாப் ஸ்பெக் மாடல் ஸ்கூட்டரான ஜுபிடர் கிராண்டை அப்கிரேட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், கடந்த ஜுன் 8ம் தேதி புதிய ஜுபிடர் இசட்எக்ஸ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.
இது, ட்ரம் மற்றும் டிஸ்க் ஆகிய இரு பிரேக் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

இது அறிமுகமானபோது, அந்நிறுவனத்தின் டாப் ஸ்பெக் மாடலாக விற்பனையில் இருக்கும் ஜுபிடர் கிராண்ட்டினை, டிவிஎஸ் நிறுவனம் சந்தையை வெளியேற்றுவிடும் என தகவல் பரவியது.
ஆனால், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டிவிஎஸ் நிறுவனம் தற்போது ஓர் புத்தம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

டாப் ஸ்பெக் மாடலாக உள்ள ஜுபிடர் கிராண்ட் மாடல் ஸ்கூட்டரை மேலும் ஸ்பெஷலான மாடலாக மாற்றும் முயற்சியில் அது களமிறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகையால், கிராண்ட் ஸ்கூட்டர் சந்தையை விட்டு வெளியேறாமல், புதிய உத்வேகத்துடன் சந்தையில் களம் காண இருக்கின்றது.

அந்த வகையில், புதிய அப்டேட்டாக கிராண்ட் ஸ்கூட்டரில், ப்ளுடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இணைக்கப்பட உள்ளது. இது பல்வேறு தகவல்களை வழங்குவதுடன், ஸ்மார்ட்போனை அதனுடன் இணைத்துக் கொள்ள உதவும்.
இந்த புதிய டிஸ்பிளே, டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருப்பதைப்போன்று பெரியளவில் இருக்கும் என கூறப்படுகின்றது.

இத்திரை, இணைக்கப்பட்ட செல்போனிற்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி, பேட்டரி சதவீதம் மற்றும் நெட்வொர்க் உள்ளிட்ட மொபைல் போனின் புள்ளி விவரங்கள் பலவற்றை காண்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிவிஎஸ் நிறுவனத்தின் 110சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரில் இத்தகைய சிறப்பம்சம் பெறுவது இதுவே முதல்முறையாகும். ஆகையால், 110சிசி ஸ்கூட்டர் பிரியர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, புதிய கிராண்ட் ஸ்கூட்டரில், எல்இடி தரத்திலான ஹெட்லைட் வழங்கப்பட உள்ளது. இதே, திறன் கொண்ட மின் விளக்குதான் அதன் முந்தைய தலைமுறை மாடலில் இடம்பெற்றிருக்கின்றது. கூடுதலாக, இந்த ஸ்கூட்டரில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் எதிர்பார்க்கப்படுகின்றது. அது, டைமண்ட் கட் ஃபினிஸிங்கில் இருக்கலாம்.

இதேபோன்று, அதன் தோற்ற வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. அந்தவகையில், புதிய காஸ்மெட்டிக், நிறத்தேர்வு மற்றும் கிராஃபிக் டிசைன்கள் இடம்பெற இருக்கின்றது. ஆகையால், புதிய கிராண்ட் இதுவரை காணாத வித்தியாசமான சிறப்புகளுடன் களமிறங்க இருக்கின்றது.

மேலும், புதிய டிவிஎஸ் கிராண்ட் ஸ்கூட்டரில் 109.7 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆனால், இந்த எஞ்ஜின் பிஎஸ்6 தரத்தில் இருக்கபோவதில்லை. ஏனென்றால், இந்த தரத்திலான எஞ்ஜின் ஸ்கூட்டரின் விலையை சற்று உயர்த்திவிடும். அது, விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகையால், புதிய கிராண்ட் ஸ்கூட்டர் பிஎஸ்4 தரத்திலேயே அறிமுகமாக இருக்கின்றது. இந்த புதிய அப்கிரேடைக் கொண்ட டாப் ஸ்பெக் மாடல் கிராண்ட் மிக விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. அதேசமயம், இதன் பிஎஸ்-6 தரத்திலான ஸ்கூட்டர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஸ்கூட்டர், ஜுபிடர் இசட்எக்ஸ் மாடலைக் காட்டிலும் ஆயிரம் அல்லது 1,200 ரூபாய் அதிக விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். ஜுபிடர் இசட்எக்ஸ் மாடல் தற்போது இந்தியாவில் ரூ. 57,443-59,950 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








