டிவிஎஸ் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்... வளர்ச்சியா? வீழ்ச்சியா?
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தமிழக தலைநகர் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2018-19ம் நிதியாண்டில், 37.57 லட்சம் வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி விற்பனை செய்துள்ளது. நேற்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய 2017-18ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனியானது முந்தைய நிதியாண்டில் 33.67 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதத்தை மட்டும் எடுத்து கொண்டால் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி சற்று சரிவை சந்தித்துள்ளது.

ஏனெனில் கடந்த மார்ச் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியானது 3,25,345 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3,26,667 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. என்றாலும் இது சிறிய அளவிலான பின்னடைவுதான்.

கடந்த மார்ச் மாதத்தில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி விற்பனை செய்த மொத்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 3,10,901. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,15,773ஆக இருந்தது. இது 1.54 சதவீத வீழ்ச்சியாகும்.

ஆனால் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை என்பதை மட்டும் எடுத்து கொண்டால், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வளர்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1,41,086 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெறும் 1,34,420ஆக மட்டுமே இருந்தது. இது 4.95 சதவீத வளர்ச்சியாகும்.

அதே சமயம் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ஸ்கூட்டர் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 98,477 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,00,972 ஆக இருந்தது. இது 2.47 சதவீத வீழ்ச்சியாகும்.

அதே நேரத்தில் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 14,444 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெறும் 10,894ஆக மட்டுமே இருந்தது. இது 33 சதவீத வளர்ச்சியாகும்.

இதேபோல் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் வளர்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 76,405 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 59,628 ஆக மட்டுமே இருந்தது. இது 28 சதவீத வளர்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications








