டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் அறிமுக விபரம்!
டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனத்தின் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த ஆண்டு முதல் மின்சார வாகனங்களுக்கான யுகம் துவங்க இருக்கிறது. அனைத்து வாகன நிறுவனங்களும் மின்சார வாகனங்களை சந்தையில் களமிறக்குவதற்கு தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், டிவிஎஸ் நிறுவனமும் மின்சார மாடலை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

டிவிஎஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் குறித்த விபரங்களை டிவிஎஸ் தலைவர் கே.என்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அப்போது, பேசிய அவர்," மின்சார வாகனங்களுக்கான தொழில்நுட்பங்களுக்காக தேவையான அளவு முதலீடு செய்திருக்கிறோம். நடப்பு நிதி ஆண்டில் முதல் மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் கூடுதல் விபரங்களை பகிர்ந்து கொள்வோம்," என்று கூறி இருக்கிறார்.

அவரது கருத்துப்படி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் மின்சார மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டிவிஎஸ் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அடிப்படையிலான மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய க்ரியான் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட்டிற்கான சில மின்னணு தொழில்நுட்பங்களை இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் உருவாக்கி இருந்தது. இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்ட்டு இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக ஜிபிஸ் நேவிகேஷன் , ஜியோ ஃபென்சிங் வசதிகளை பெற முடியும். தவிரவும், ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர், ட்ரிப் இண்டிகேட்டர், பேட்டரி நிலை உள்ளிட்ட பல தகவல்களை பெற முடியும்.

டிவிஎஸ் க்ரியான் மின்சார ஸ்கூட்டரில் மூன்று விதமான நிலைகளில் மின் மோட்டாரின் செயல்திறனை மாற்றுவதற்கான டிரைவிங் மோடுகள் உள்ளன. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், டிவிஎஸ் சர்வருடன் இணைத்துக் கொள்ளும் வசதி, திருடு போவதை தவிர்க்கும் தொழில்நுட்பம், பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் இருந்தன. இவை அனைத்தும் தயாரிப்பு நிலை மாடலிலும் இடம்பெறும்.

டிவிஎஸ் க்ரியான் ஸ்கூட்டரில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கும். யுஎஸ்பி சார்ஜர் வசதி, எல்இடி விளக்குகளும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டிவிஎஸ் க்ரியான் கான்செப்ட்டில் மூன்று லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பேட்டரி மூலமாக 12 kW மின்சாரத்தை வழங்க முடியும். இந்த பேட்டரியை குயிக் சார்ஜர் மூலமாக 60 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் பயணிக்கும்.

இந்த ஸ்கூட்டரில் முன்சக்கரத்திற்கான சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த ஸ்கூட்டரில் 50 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








