இளைய தலைமுறையை குறி வைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன்... என்னவென்று தெரியுமா?
இளைய தலைமுறையை குறி வைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, இந்திய மார்க்கெட்டில் மோட்டார்சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் என பல்வேறு இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதில், என்டார்க் 125 ஸ்கூட்டரும் (TVS Ntorq 125) ஒன்று.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 14,695 என்டார்க் 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில், 21,010ஆக அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டு மே மாதத்தில் 6,315 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 43 சதவீத வளர்ச்சியாகும். டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர், இந்திய மார்க்கெட்டில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 8,309 என்டார்க் 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. அதன்பின் தற்போது வரை டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக இளைய தலைமுறையை இலக்காக வைத்துதான் என்டார்க் 125 ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதற்கேற்ப பல்வேறு அட்டகாசமான வசதிகளை என்டார்க் 125 ஸ்கூட்டரில் டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதற்கு டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்களின் பட்டியலில், டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ஐந்தாவது இடத்தை பிடித்து அசத்தியதும் கவனிக்கத்தக்கது.

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு அதன் அட்டகாசமான ஸ்டைலும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில், 124.79 சிசி, கார்புரேட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 9.1 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் விலை 58,252 (ட்ரம் பிரேக்) ரூபாய் ஆகும்.

அதே சமயம் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குடன் கூடிய வேரியண்ட்டின் விலை 59,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். சுஸுகி அக்செஸ் 125, ஹோண்டா கிரேஸியா மற்றும் அப்ரில்லா எஸ்ஆர் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுடன், டிவிஎஸ் என்டார்க் 125 போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








