டிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்!
டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க்125 ஸ்கூட்டரின் ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

டிவிஎஸ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த என்டார்க் ஸ்கூட்டர் மாடலில் ரேஸ் எடிசனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் 125 சிசி திறன் கொண்டதாகும். இதற்கு டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 62,995 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரேஸ் எடிசன் என்டார்க் ஸ்கூட்டர், தற்போது விற்பனையில் இருக்கும் என்டார்க்கை காட்டிலும் சாற்று சிறப்பு மாற்றத்தைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், புதிய மற்றும் கவனிக்கத்தக்க மாற்றமாக புதிய சிக்னேச்சர் எல்இடி பகல் நேர மின் விளக்கு இருக்கின்றது. இது ஸ்கூட்டரின் முகப்பு பகுதிக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் புத்தம் புதிய தோற்றத்தை வழங்குகின்றது.
இத்துடன், என்டார்க் ரேஸ் எடிசனில் ஹசார்ட் லேம்ப் நிறுவப்பட்டுள்ளது. இதனை கட்டுபடுத்துவதற்காக பிரத்யேக சிவப்பு நிறத்திலான ஸ்விட்ச் ஸ்கூட்டரில் நிறுவப்பட்டுள்ளது.
இதேபோன்று, இந்த ஸ்கூட்டரில் சில காஸ்மெட்டிக் மற்றும் கிராஃபிக்ஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்கூட்டரின் அனைத்து பகுதிகளையும் அலங்கரிக்கும் வகையில், கொடிபோன்ற கிராஃபிக்குகள் பைக்கின் பக்கவாட்டு, முன் மற்றும் பின் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இந்த ஸ்கூட்டர் மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களைக் கொண்டு காட்சியளிக்கின்றது.
இதைத்தொடர்ந்து, பிரத்யேக தொழில்நுட்ப வசதியாக டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் ப்ளூடூத் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களிலேயே இந்த வசதியைப் பெறும் முதல் ஸ்கூட்டர் இதுவே ஆகும்.

இது பல்வேறு தகவல்களை மொபைலிலேயே அறிந்து கொள்ள உதவும். இதேபோன்று, பல்வேறு சிறப்பு வசதிகள் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இதில் நிறுவப்பட்டுள்ளது. இதன் ஸ்டைலும் அதனடிப்படையிலேயே கணிசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி அனிரூத் ஹல்டர் கூறியாதவது, "டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பிட்ட ஜென் இசட் வாடக்கையாளர்கள் அளித்து வரும் பேராதரவு பிரம்மிப்படையும் வகையில் இருக்கின்றது. முக்கியமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்ல மதிப்பீடு வழங்கப்பட்டு வருகின்றது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் நிறுவனத்தின் 37 ஆண்டு கால ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இத்துடன், இந்த கொண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய என்டார்க் 125 மாடலுக்கான புக்கிங் ஆன்லைனில் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அனிரூத் ஹல்டரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

புத்தம் புதிய என்டார்க் 125 ஸ்போர்ட்ஸ் எடிசனில் சிவிடிஐ-ஆர்இவிவி தரத்திலான 124.79 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிங்கிள் சிலிண்டர் கொண்ட 4 ஸ்ட்ரோக், 3 வால்வ், ஏர் கூல்ட் எஸ்.ஓ.எச்.சி., எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 9.4 பிஎஸ் பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 10.5 என் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியார்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், என்டார்க் 125 ரேஸ் எடிசன் ஸ்கூட்டரின் முன் சக்கரத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் அனைத்து விதத்திலும் மதிப்பு வாய்ந்த மாடலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








